கோவை பேரூர் யானைக்கு புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கல்யாணி யானை அந்த குளியல் தொட்டியில் ஜாலியாக குளியல் போட்டது.
கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார்.
இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.
இந்த நிலையில் பேரூர் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்து வந்தனர். இதை அடுத்து கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவில் அமைக்கப்பட்டது.
யானை குளியல் தொட்டி 10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம் கொண்டது. யானை நடைப்பாதை 300 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்டது. யானை செல்லும் பாதையின் சாய்வு தளம் 12.40 மீட்டர் நீளம், 420 மீட்டர் அகலம் என குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
மேலும் குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் மோனோ பிளாக் மோட்டார் மற்றும் யானை குளிப்பதற்கு ஷவர் பொருத்தப்பட்டுள்ளது. யானைக்கு நிழற் குடையும் அமைக்கப்படவுள்ளது. இதேபோல் அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்றுமண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது.
கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், நீச்சல் குளம் அமைந்தது கல்யாணி யானைக்கு உதவியாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant, Local News