பொள்ளாச்சியில் வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானையின் உயிரிழப்புக்கு காரணம் வெடி விபத்து என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவ குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வனத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் கடந்த 14.ஆம் தேதி ஒரு பெண் காட்டு யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்து சோர்வுற்ற நிலையில் சுற்றி வந்தது. இதை அடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் யானையை கண்காணித்த போது யானையின் நாக்கு மற்றும் வாய்ப்பகுதியில் காயங்கள் இருந்ததும் உடல் மெலிந்த நிலையில் மிகுந்த சோர்வுற்ற நிலையில் இருந்ததை கண்டு வனத்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர்.
Read More : புதுவையில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. குதூகலித்த மக்கள்!
யானை உணவு உட்கொள்ள முடியாமல் மிகுந்த வலியுடன் இருப்பதை அறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலமான ராமசுப்பிரமணியம் அவர்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை மேற்கொள்வதற்காக பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனபகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்.
இந்நிலையில் கடந்த 17.ம் தேதி மயக்கூசி செலுத்தி கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் யானையை லாரியின் மூலம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியான டாப்ஸ்லிப் வரகளியாரு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் கிரால் எனப்படும் மிகப்பெரிய மரக்கூண்டில் யானை அடைக்கப்பட்டது.
வனத்துறையினர் வாய் மற்றும் நாக்கு பகுதியில் காயங்களுடன் தவித்து வரும் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் யானைக்கு நீர்ச்சத்தை அதிகப்படுத்த குளுக்கோஸ் போட்டு யானையின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர்..
இந்நிலையில் நேற்று இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று யானைக்கு வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்..
இந்த ஆய்வில் யானை வெடி மருந்து உட்கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு நாக்கு தாடை மற்றும் பற்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை இன்று வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காரமடை வனச்சரக வனத்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து யானை இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : ம.சக்திவேல்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant