Home /coimbatore /

தடைகள், தாமதங்களை தகர்க்கும் கோவை ஈச்சனாரி விநாயகர் - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

தடைகள், தாமதங்களை தகர்க்கும் கோவை ஈச்சனாரி விநாயகர் - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

கோயம்புத்தூர் ஈச்சனாரி கோவில்

கோயம்புத்தூர் ஈச்சனாரி கோவில்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகரை, விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் வேலைகளில் தடைகள், தாமதங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    அச்சு முறிந்து அமர்ந்த விநாயகர்

    கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் பிரதான தெய்வமாக விநாயகர் வீற்றுள்ளார். முற்காலத்தில் மேலை சிதம்பரம் எனப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் சிலையை மதுரை நகரிலிருந்து வண்டியில் கட்டி சென்று கொண்டிருந்த போது, தற்போது இக்கோவில் இருக்கும் இடத்திலேயே வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் விக்ரகம் இங்கேயே அமர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

    அங்கிருந்த மக்கள் எவ்வளவோ முயன்றும் அந்த விநாயகர் சிலையை இங்கிருந்து அப்புறப்படுத்த முடிவில்லையாம். இதனால், காஞ்சி சங்கராச்சாரியார் அருள் வாக்குப்படி இந்த சிலை இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. அந்தக் கோவிலே கோவையில் தற்போதிருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவிலாகும்.

    கோவிலின் சிறப்புகள்

    மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் என அழகாக காட்சியளிக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற இடமாக இருந்து வருகிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோவிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாகும். இந்த திருக்கோவிலின் தினப்படி ஒரு நாளைய பூஜைக்கு தேவைப்படும் பால், சந்தனம், குங்குமம், மலர், பன்னீர் மற்றும் அன்றைய தினத்திற்கான மின் கட்டணத்திற்கான அத்தனை செலவுகளையும் கட்டளைதாரர்கள் எனப்படும் பக்தர்களே ஏற்கின்றனர். இங்கு விநாயகருக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    பக்தர்கள் தங்கள் வாழ்வில் முக்கிய வேலைகளை மேற்கொள்ளும் முன்பு இந்த விநாயகரை வழிபட்டு தொடங்குவதால், அந்த காரியங்கள் தடைகள், தாமதங்களின்றி வெற்றி பெறுவதாக கூறுகின்றனர். பிள்ளைகள் கல்வி, கலைகளில் உயர்ந்த நிலைகளை அடையவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் உண்டாகவும், வேலைகளில் பதவி உயர்வு கிடைக்கவும் வேண்டும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறுகினர்.

    இங்கு வழக்கமாக வந்து வழிபடும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலபிஷேகம் செய்தல் போன்றவற்றின் மூலம் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கோவைவாசிகள் புதிய வாகனம் வாங்கினால் இந்த விநாயகரிடம் தரிசித்த பின்னரே மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    கோவில் அமைவிடம்

    கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஈச்சனாரி என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோவில். இவ்வூருக்கு செல்ல கோவை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன. கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று இங்கே வழிபட்டால் தடைகள், தாமதங்கள் நீங்கி பல நன்மைகள் நடைபெறும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி