கோவை மாநகராட்சி 97 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான இவர், திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள். இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி தொடர்ந்து 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் உள்ளாட்சி பதவி பறிபோகும். இது தொடர்பாக அடுத்து நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்தும், மாநகராட்சி நிர்வாகத்தால் கேட்கப்பட்ட விளக்கத்திற்கும் பதில் அளிக்க வேண்டும். அவற்றை மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற கூட்டத்தில் வெளியிடுவார்.
அந்த காரணம் அடிப்படையில் தகுதி இழந்தவர்கள் மீண்டும் மாமன்ற உறுப்பினராக தொடர்வது குறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டம் முடிவு செய்யும். இதன் அடிப்படையில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் இன்று முதல் கவுன்சிலர் தகுதியை இழக்கிறார்.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்டு கவுன்சிலர் நிவேதாவிற்கு கடிதம் அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆளும் கட்சியின் இளம் பெண் கவுன்சிலரான நிவேதா, உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் வேட்பாளர்களின் ஒருவராக கருதப்பட்டார். எதிர்பார்த்தபடி மேயர் பதவி கிடைக்காத நிலையில் மாமன்ற கூட்டங்களில் முறையாக பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். தற்பொழுது கவுன்சிலர் பதவி தகுதி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore