ஹோம் /கோயம்புத்தூர் /

வலி நிவாரணி, மனநல பாதிப்பு மாத்திரைகளை பயன்படுத்தி போதை - கோவை இளைஞர்களின் அபாய பழக்கம்

வலி நிவாரணி, மனநல பாதிப்பு மாத்திரைகளை பயன்படுத்தி போதை - கோவை இளைஞர்களின் அபாய பழக்கம்

மாதிரிப்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் இளைஞர்களின் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்துவதாக காவல்துறையினர் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் போதை மாத்திரை கலாச்சாரம் தலைதூக்கி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று போலீசாரும், மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

கோவை மாநகரில் போதை வஸ்துக்கள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகரிக்கவே ஆபரேஷன் 2.O என்ற பெயரில் போலீசார் அவ்வப்போது கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பயன்படுத்தி போதை கொள்ளும் பழக்கம் கோவை இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக மகப்பேறு மருத்துவர்கள் வலி நிவாரணியாக வழங்கும் டைடோல் 100 எம்.ஜி மற்றும் டெபெண்டடால் என்ற மாத்திரைகளையும், மன நல மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு வழங்கும் நைட்ரோஜிபம் 100 எம்.ஜி என்ற மாத்திரைகளையும் போதைப் பொருட்களாக இளைஞர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘இது போன்ற மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வழங்கப்படமாட்டாது. ஆனால், சிலர் மருந்துக்கடை நடத்துவோரிடம் கூட்டு சேர்ந்து கொண்டும் இணையதளங்களில் போலியான மருத்துவர் பரிந்துரை கடிதத்தையும் கொடுத்து இத்தகைய மாத்திரைகள் வாங்கி விடுகின்றனர். சமீபத்தில் கணபதி நகர் அருகே இத்தகைய மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளரை கைது செய்துள்ளோம்.

இந்த மாதத்தில் மட்டும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சுமார் 20 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே உள்ளனர்.

ஒரு மாத்திரையை 30 ரூபாய்க்கு வாங்கி அதனை பொடியாக்கி மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் சலைன் நீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பு வழியாக 5 டோஸ்கள் வரை போதை ஏற்றுகின்றனர். இவர்களிடம் வரும் இளைஞர்களுக்கு ஒரு டோசுக்கு ரூ.500 வரை வசூலிக்கின்றனர்.

இது அதீத போதையை ஏற்படுத்துவதால் நாளடைவில் இளைஞர்கள் இதற்கு அடிமையாகின்றனர்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மன நல மருத்துவர் மாரிக்கண்ணன் கூறியதாவது, ‘நைட்ரோஜிபம் என்ற மாத்திரை மன நோயாளிகளுக்கே தனியாகக் கொடுப்பதில்லை. அதனால் தான் மற்ற மன நல மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கிறோம். இதனை அரசு பரிந்துரைக்கிறது. ஏனெனில் இதில் மனதை அடிமையாக்கும் தன்மை உடையது.

முதலில் நண்பர்களின் தூண்டுதலின் பேரில் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் நாளடைவில் அவர்களே இதிலிருந்து மீள முடியாது. திடீரென இந்த மாத்திரையை கைவிட்டால் அவர்களுக்கு மன நல பாதிப்பு, வலிப்பு, ஆவேசம், தூக்கமின்மை, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம்.

இத்தகைய பழக்கம் நாளடைவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும். முதலில் ஒரு மாத்திரையை உபயோகிப்பவர்கள் சில நாட்களிலேயே இரண்டு, மூன்று என்று மாத்திரையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இதனைத் தொடர்ந்தால் காலப்போக்கில் வாழ்க்கை மீதான பிடிமானம் குறைந்து, ஞாபசக்தி மற்றும் கவனக்குறைபாடு ஏற்படும். இளைஞர்களுக்கு இந்த விஷயத்தில் மோகம் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பணத்தை அவர்களிடம் கணக்கு கேட்க வேண்டும். என்ன செலவு செய்கிறார்கள்? எத்தகைய நண்பர்களுடன் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்தே தீர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News