Home /coimbatore /

கோயம்புத்தூரில் பயன்பாட்டிற்கு வரும் 2 மேம்பாலங்கள்: எப்போது திறப்பு?

கோயம்புத்தூரில் பயன்பாட்டிற்கு வரும் 2 மேம்பாலங்கள்: எப்போது திறப்பு?

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் திறப்பு விழா காண உள்ளன.

  • Last Updated :
    கோவையில் திருச்சி சாலையில் ரெயின்போவில் இருந்து பங்குச்சந்தை அலுவலகம் வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் ஹவுசிங் யுனிட் தொடங்கி ராமசாமி திருமண மண்டபம் வரையிலும் அமைக்கப்பட்ட மேம்பாலங்களின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது.

    தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழலில், திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் திருச்சி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலமும், மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைக்கப்படும் சாலையும் விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளன. இந்த இரண்டு பாலங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    திருச்சி சாலை மேம்பாலம்

    திருச்சி சாலையில் ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் இருந்து பங்குச்சந்தை அலுவலகம் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது.
    மொத்தம் ரூ.232 கோடி செலவில் 3.15 கி,மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த மேம்பாலமானது, சுங்கம் பகுதியில் இருந்து உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலமானது 17.20 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. சுங்கம் பகுதியில் அமைய உள்ள ரவுண்டானாவில் மட்டும் 19.60 மீட்டர் அகலத்தை இந்த பாலம் கொண்டுள்ளது.
    3.15 கி.மீ தூரமுள்ள மேம்பாலத்திற்கு மொத்தம் 111 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தூணுக்கும் இடையே 25 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது, சுங்கம் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும்.

    கவுண்டம்பாளையம் மேம்பாலம்

    கோவையில் இருந்து ஊட்டி, மைசூரு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. கோவை மாநகருக்குள் இருந்து துடியலூர், பெரிய நாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளதால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

    குறுகிய சாலை என்பதால் சாலையை விரிவுபடுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
    இதனிடையே கவுண்டம்பாளையம் சந்திப்பு ஹவுசிங் யூனிட்டில் இருந்து ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

    மொத்தம் ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் 29 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து, சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டுவிட்டன. தற்போது மேம்பாலத்திற்கு பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது துடியலூரில் இருந்து கோவை மாநகர் நோக்கி வருபவர்களும், கவுண்டம்பாளையத்தில் இருந்து துடியலூர் நோக்கி செல்பவர்களும் பெருமூச்சு விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    எப்போது?

    மேம்பால கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ள சூழலில், எப்போது பாலங்கள் திறக்கப்படும் என்று கேள்வியெழுப்பினோம். அதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், "கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் பணிகளும் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு மேம்பாலங்களையும் ஜூன் மாதத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த பாலங்களை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றனர்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore, Traffic

    அடுத்த செய்தி