Home /coimbatore /

முருகன்-வள்ளி திருமணத்தை கொண்டாடும் வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் கோவை மக்கள்

முருகன்-வள்ளி திருமணத்தை கொண்டாடும் வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் கோவை மக்கள்

வள்ளி

வள்ளி கும்மியாட்டம்

கோயம்புத்தூரில் முருகப் பெருமான், வள்ளி திருமணத்தை மையமாகக் கொண்டு ஆடப்படும் வள்ளி கும்மி கலையை மீண்டும் அம்மாவட்ட மக்கள் மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

முருகப்பெருமான் மற்றும் வள்ளியின் திருமணத்தை மையமாக கொண்டு பாடப்படுவதும், பாடலுக்கு ஏற்றவாறு உடலை அசைத்து ஆடுவதும் வள்ளி கும்மி என்று அழைக்கப்படுகிறது.

இந்த வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வள்ளிக்கும்மி மேற்கு மண்டல மாவட்டங்களில் மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் இந்த கலை மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறைய துவங்கியது.

வள்ளி கும்மியாட்டத்தில் பெண்கள்


இந்த சூழலில் கோவையைச் சேர்ந்த மக்கள் சிங்கை வள்ளி கும்மி என்ற பெயரில் மீண்டும் இந்த வள்ளி கும்மியாட்டத்தை தேர்வு செய்து தினமும் ஒரு மணி நேரம் வள்ளி கும்மி பாடலை பாடி ஆடுகின்றனர்.

வள்ளி கும்மியாட்டத்தில் பெண்கள்


இதன் மூலமாக தங்கள் உடல் நலனும், மன நலமும் மேம்படுவதாகத் தெரிவிக்கும் மக்கள் குழந்தைகளின் கற்றல் திறனும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வள்ளி கும்மியை கற்கும் பலரும் பெண்களாக உள்ளனர். இதன் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள் சிலர் இந்த வள்ளி கும்மியாட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

வள்ளி கும்மியாட்டத்தில் பெண்கள்


வள்ளி கும்மியோடு இணைந்து கோபியர் கோலாட்டம், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டத்தையும் கற்றுக் கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முனைப்புகாட்டும் இவர்கள் தாங்கள் கலைகளை கற்றுக் கொண்ட பின்பு, பிறருக்கு அதனைக் கற்றுக்கொடுக்க எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை.

இதற்கடுத்த படியாக, ஒயிலாட்டம், ஜமாப் உள்ளிட்ட கலைகளையும் கற்றுக்கொண்டு அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முனைப்பு காட்டி வருகின்றனர் சிங்கை வள்ளி கும்மியினர்.

பெருநகரான கோவையிலிருந்து மக்கள் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் இம்மக்களுக்கு வாழ்த்துகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி