Home /coimbatore /

பாதுகாப்பு கேட்டு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடி.. கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் 

பாதுகாப்பு கேட்டு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடி.. கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் 

பாதுகாப்பு கேட்டு ஐஜி அலுவலகம் வந்த காதல் ஜோடி

பாதுகாப்பு கேட்டு ஐஜி அலுவலகம் வந்த காதல் ஜோடி

Coimbatore District: கோவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்  

  கோவையில் நேற்று (மே24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்

  50 முறை சிறைக்கு சென்றும் திருந்தாத கொள்ளையன்

  கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருட முயன்ற நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அவரது குணா என்கிற குணசேகரன் (வயது 52) என்பதும், கோவை சுக்கரவார் பேட்டை மில் ரோட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 லேப்-டாப் மற்றும் ரூ.1,500 பிக்பாக்கெட் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இவர் 10 வயதில் இருந்து திருடி வருவதும். 50 முறை சிறை சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  இலங்கை வாலிபர் மண்டை உடைப்பு

  ஈரோடு பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கைகள் முகாமை சேர்ந்தவர் பிரகாஷ் பெயிண்டிங் காண்டிராக்டர். இவர் கடந்த 2 வாரமாக காரமடை பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரமடை கார் ஸ்டாண்ட் அருகே உள்ள நிழற்குடையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார். மேலும், தராறு செய்து கல்லை எடுத்து பிரகாசின் மண்டையை உடைத்தார். இதுகுறித்து பிரகாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை கணபதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராமன் (வயது 24) என்பவர் பிரகாசை தாக்கியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  சில்லரை கொடுக்காததால் பயணி மீது தாக்குதல்

  அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி சம்பவத்தன்று அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் வாங்கும்போது ரங்கசாமி, கண்டக்டரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும், ரங்கசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதனை பார்த்த பஸ் டிரைவர் சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பஸ் நிறுத்தினார். பின்னர் கண்டக்டருடன் சேர்ந்து ரங்கசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  கோவை நீதிமன்றத்தில் 2 கோப்புகள் மாயம்

  கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையாத பண்டங்கள் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவர் கடந்த சில மாதங்களாக முறையான தகவல் அளிக்காமல் அவ்வப்போது விடுமுறை எடுத்தார். இதனையடுத்து நீதிபதி அவரை 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இந்நிலையில் நீதிமன்ற அலுவலக அறையில் இருந்த 2 கோப்புக்கள் மாயமானது.இதுகுறித்து நீதிபதி பரிந்துரையின் பேரில் தலைமை குமாஸ்தா ரவீந்திரகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குமாஸ்தா மனோஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறனர்.

  கோவை அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் பாடம் அளிப்பதில்லை என்று புகார்

  கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வருகிறது இந்த துறையில் பேராசிரியராக இருப்பவர் பாத்திமா. இவர் கடந்த ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மேலும் ஆசிரியர் முறையாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

  தனி குறுந்தொழில் பேட்டை அமைக்க வலியுறுத்தி டேக்ட் சங்கம் மனு

  கோவையில் தனி குறுந்தொழில் பேட்டை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டேக்ட் (தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள்) சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். டேக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையிலான தொழில்துறையினர் இந்த மனுவை அளித்தனர்.

  காதல் ஜோடி தஞ்சம்

  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21) ஓசூரை அடுத்த சாமனப்பள்ளி பகுதியை சேர்ந்த நதியா(19)ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் செய்த மாலையுடன் கோவை பந்தயச்சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்களது பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்தனர்.

  செய்தியாளர் : சௌந்தர்மோகன்
  Published by:Arun
  First published:

  Tags: Coimbatore

  அடுத்த செய்தி