Home /coimbatore /

முதல்வரை விமர்சித்த வானதி சீனிவாசன்.. கோவை மாவட்ட செய்திகள் (மே 26)

முதல்வரை விமர்சித்த வானதி சீனிவாசன்.. கோவை மாவட்ட செய்திகள் (மே 26)

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

Coimbatore District: கோவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

  கோவையில் நேற்று (மே 25)நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

  மேம்பால பணிகள் முடிவது எப்போது?

  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை அடுத்த 9 மாதங்களுக்குள் முடிக்கவும், ஜி.என் மில்ஸ் மேம்பால பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளபட்டோதடு ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடத்தபட்டுள்ளது” என்றார்.

  மன நோயாளி போல் நடித்து திருடும் நபரை பிடித்த போலீஸ்

  கோவையில் மன நோயாளி போல் நடித்து குப்பை பொருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உலோகங்களை திருடும் சிசிடிவி காட்சி வெளியானது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த காளியப்பன் என்பதும், தன்னை ஒரு மனநோயாளி போல் காட்டிக்கொண்ட காளியப்பன். யாரும் இல்லாத இடத்தில் இருக்கின்ற உலோகத்தைத் திருடிச் சென்று விற்று பணமாக்கியுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு முடி திருத்தம் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  முதலமைச்சர் பிடிவாதம் பிடித்து வருகிறார் - வானதி சீனிவாசன்

  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசு தங்களது வரி வருவாயைக் குறைத்தது போல், மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். வரியைக் குறைத்துக் கொள்வதில் தவறில்லை. தமிழக அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதலமைச்சர் பிடிவாதம் பிடித்து வருகிறார். மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசைக் குறை கூறி வருவதில் எந்த நியாயமும் இல்லை. அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நேற்று மாலை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சீமான் உருவபொம்மையை எரிக்க முயற்சி

  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத் மற்றும் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி கோவை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் கிளின்டன், சூரிய பிரகாஷ் , மாவட்ட துணைத்தலைவர் நவீன், சிங்காரம், ராஜீவ், சதீஸ், ஜிவா, பைசூல், ராஜேஷ் ஆகியோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்

  3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  கோவை கணபதி கம்பன் நகர் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கோவை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கணபதி கம்பன் நகர் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மறைமுகமான இடத்தில் 40 மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு மூட்டைகளிலும் தலா 50 கிலோ என மொத்தம் 2டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து ராஜா என்பவரை கைது செய்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பேருக்கு பரிசோதனைகள்

  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகளில் 2 வது முறை பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.தற்போது மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டவா்கள் 73 ஆயிரத்து 633 பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 314 பேர் மற்றும் இரண்டு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 678 பேர் என மொத்தமாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 625 பேர் உள்ளனர். இவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  செய்தியாளர் : சௌந்தர்மோகன்
  Published by:Arun
  First published:

  Tags: Coimbatore

  அடுத்த செய்தி