Home /coimbatore /

மதுக்கரையில் தார் திருட்டு.. 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. - கோவை மாவட்ட செய்திகள் (மே20)

மதுக்கரையில் தார் திருட்டு.. 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. - கோவை மாவட்ட செய்திகள் (மே20)

ஸ்டாலின்

ஸ்டாலின்

Coimbatore District: கோவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  கோவையில் நேற்று (மே19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  கோவை வரும் 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

  கோவை - போத்தனூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மே 23ம் தேதி காலை 8.15 மணிக்கு பிலாஸ்பூரில் புறப்பட்டு 24ம் தேதி மாலை 3.42 மணிக்கு கோவையை வந்தடையும் பிலாஸ்பூா் - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:22815) அன்றைய தினம் கோவை நிலையத்துக்கு வராது. அதற்கு பதிலாக இருகூரில் இருந்து போத்தனூா் ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படும். இதேபோல, மே 24 ம் தேதி மாலை 4.30 மணிக்கு பாட்னாவில் புறப்பட்டு, 26 ம் தேதி மாலை 5.02 மணிக்கு கோவையை வந்தடையும் பாட்னா - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 22670) அன்றைய தினம் கோவை நிலையத்துக்கு வராது. அந்த ரயில் இருகூரில் இருந்து போத்தனூா் ரயில் நிலையம் சென்றடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  மதுக்கரையில் தார் திருடிய 2 பேர் கைது

  மதுக்கரை அருகே நிறுத்தி இருந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த தார் திருட்டு போனதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மதுக்கரை சென்று அங்கிருந்த குடோனை சோதனை செய்தபோது 775 கிலோ தார் திருடி அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  விசாரணையில் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஞானப்பிரகாசம் (48) என்பவர் சாலையில் நிறுத்தி இருந்த லாரியில் இருந்து தாரை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  சீனா தைவானுக்கு போட்டியாகுங்கள் - முதலமைச்சர்

  தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர் எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். தொழில் துறையில் நட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென கோவையில் தொழில்துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  மேட்டுப்பாளையம் அருகே 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..

  கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ( 65). இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றார். சுற்றுலா முடித்து  ஊட்டி வழியாக ஊர் திரும்பினர். காரை யோபேஸ் ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்றது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்தது.
  இதில் காரை ஓட்டி வந்த ஜோஸ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ்,அனாமிகா,தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காரில் இருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு..

  அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். ஆப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் 10 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் சிபிசிஐடி போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளனர். இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

  முதல்வர் பாதுகாப்பிற்கு சென்ற காவலர் மயங்கி பள்ளத்தில் விழுந்தார்..

  கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் நிகழ்ச்சியினை முடித்து விட்டு உதகை சென்றார். முதல்வர் பாதுகாப்பிற்காக சேலத்தில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.இதில் சேலத்தை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பிளாக்தான்டர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜாராம் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்ததார். இதனை கண்ட சக போலீசார் உடனடியாக பள்ளத்தில் விழுந்து காயமடைந்த காவலர் ராஜராமினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

  அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சி..

  கோவை பூ மார்க்கெட் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு வளர்ந்த வாகை மரம் உள்ளது இந்த மரத்தை வெட்டுவதற்கு அரசிடம் எந்த அனுமதியும் கோராமல் சில மர்ம நபர்கள் மர அறுவை இயந்திரம் கொண்டு மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது ஓசை சையது என்ற சமூக ஆர்வலருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மர அறுவை இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  தமிழினப்படுகொலை 13 வது ஆண்டு நினைவேந்தல்..

  தமிழினப் படுகொலைக்கான 13வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. மே17 அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார். இதில் பறையிசை இசைக்கப்பட்டு தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

  குடிமைப் பணிகள் முதல் நிலை எழுத்து தேர்வு..

  குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை கோவை மாவட்டத்திலிருந்து 48 ஆயிரத்து 39 பேர் எழுத உள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் 150 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் : சௌந்தர்மோகன்
  Published by:Arun
  First published:

  Tags: Coimbatore

  அடுத்த செய்தி