Home /coimbatore /

கோவையில் சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல்.. வாகனத்தை லாவகமாக திருடும் சிறுவன் - மாவட்டத்தில் முக்கிய செய்திகள் (மே 19)

கோவையில் சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல்.. வாகனத்தை லாவகமாக திருடும் சிறுவன் - மாவட்டத்தில் முக்கிய செய்திகள் (மே 19)

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய த.பெ.தி.க.,வினர்

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய த.பெ.தி.க.,வினர்

Coimbatore District: கோவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  கோவையில்  நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  பேரறிவாளன் விடுதலை : கோவையில் கொண்டாட்டம்

  பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கும், மாநில கவர்னருக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கொட்டு வைத்துள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

  வாகனத்தை லாவகமாக திருடும் சிறுவன்

  கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ். தனது இருசக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டிற்குள் சென்றார்.அப்போது அங்கு வந்த சிறுவன் வாகனத்தில் பெட்ரோல் இருப்பதை உறுதி செய்து, லாவகமாக அந்த வாகனத்தை திருடிச்சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  கியாஸ் கசிந்து தீ விபத்து

  கோவை தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. தொழிலாளி. இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் தீர்ந்ததால் புதிய கியாஸ் சிலிண்டரை வாங்கினர்.அதனை அடுப்பில் பொருத்தி அவரது மனைவி டீ வைத்தார். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னசாமி தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது

  காவலர் தூக்கிட்டு தற்கொலை

  மேட்டுப்பாளையம் சப்டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுனராக இருந்தவர் தாமோதரன் (41). மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வந்த இவருக்கு திருமணம் ஆகி பிரேமிதா(13) என்ற மகளும், கார்த்திக்(8) என்ற மகனும் உள்ளனர். வழக்கம் போல் பணி முடித்து வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

  கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (26). தனது நண்பர் சபரிகணேஷ் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாணி ரோட்டில் சென்றார்.அப்போது ஆலாந்துறை அருகே வந்த போது, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த அசோக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார்.இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இடப்பிரச்சனையில் பெண் தற்கொலை

  காரமடை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாபு என்கிற சுப்பிரமணியன் ( 41). இவரது மனைவி ராதா (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இடம் பிரச்சினை சம்பந்தமாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
  இதனால் கோபம் அடைந்த பாபு, ராதாவை திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது ராதா வீட்டில் சாணி பவுடரை குடித்து உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இடம் பிரச்சினை சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு ராதாவிற்கும், பாபுவின் அண்ணன் கோத்தகிரியை சேர்ந்த பழனிசாமி (60) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.அப்போது அவர் ராதாவை தாக்கியதால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிவந்தது. இதையடுத்து போலீசார் பழனிசாமியை கைது செய்தனர்.

  சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல்

  கோவை மாநகராட்சியின் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில் குழுத் தலைவர் வி.பி.முபசீரா தலைமையில் நடைபெற்றது. அதன்படி, கோவை மாநகராட்சியில் 600 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 1200 சதுரடி பரப்பளவு வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1800 சதுரடி வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1800 சதுரடிக்கு அதிகவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம். வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், தொழிற்சாலைகள், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம் என்று ஒப்புதல் தெரிவித்து, மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

  கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள்

  தொழில்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் தொழில் வணிகத்துறை கூடுதல் கமிஷனர் கிரேஸ் லால்டிரின்டிக்கி பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, கோவை, திருப்பூர், கரூர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், ஒசூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவையில் என்ஜினீயரிங், ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமும், பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமும் அமைக்கப்படவுள்ளது.

  மாநகராட்சி பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு

  கோவை மாநகராட்சியில் பணிபுரியும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளம் பொறியாளர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
  த்திய மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, ஏற்கனவே கவனித்து வரும் பணிகளுடன் கூடுதலாக மத்திய மண்டலத்தின் செயற்பொறியாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல, மத்திய மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) பாபு ஏற்கனவே கவனித்து வரும் பணிகளுடன் கூடுதலாக தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளராக (திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  Published by:Arun
  First published:

  Tags: Coimbatore

  அடுத்த செய்தி