Home /coimbatore /

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்.. சோலார் பேனல்கள் மூலம் சொந்தமாக மின்சார உற்பத்தி.. செலவு என்ன?

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்.. சோலார் பேனல்கள் மூலம் சொந்தமாக மின்சார உற்பத்தி.. செலவு என்ன?

கோவை

கோவை - சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி

Coimbatore District News : மின் கட்டணத்தில் இருந்து தப்பிக்க சோலார் பேனல்.. - என்ன விலை? - முழு விவரம்..!

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ. 1,130 வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. 101 யூனிட் முதல் அனைத்து நிலையில் உள்ள மின் நுகர்வோர்களுக்குமான கட்டணம் அதிகரிக்க உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக அரசு கூறினாலும், ஏற்கனவே கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பயன்படுத்தினால் இந்த இந்த மின் கட்டண உயர்விலிருந்து தப்பிக்கலாம். இதற்காக சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய ஒளி மின் தகடுகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சோலார் பேனல்கள்


வாட்டர் ஹீட்டர்

வாட்டர் ஹீட்டர் உபயோகிக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் மின் கட்டணம் அதிகமாக வருகிறது. ஒரு நடுத்தர குடும்பம் ரூ.1500 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சோலார் வாட்டர் ஹீட்டர் உபயோகித்தால் இந்த கட்டணம் பாதியாக  குறையும். இந்த சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்க ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு மின் கட்டணம் குறையும்.

சோலார் பேனல்கள்


சோலார் தகடுகள்

பகல் நேரங்களில் மட்டும் தான் சோலார் தகடுகள் கொண்டு மின்சார உற்பத்தி செய்ய முடியும். நம்மில் பலரும் பகல் நேரத்தில் அதிக அளவிலான மின்சாரத்தை பயன்படுத்துவதில்லை. எனவே பகல் நேரத்தில் சோலார் தகடுகள் மூலமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நெட்மீட்டர் மூலமாக நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசுக்கு வழங்கலாம். இந்த நெட்மீட்டர் நாம் மின்வாரியத்திடம் இருந்து பெறும் மின்சாரத்தையும், நாம் சோலார் தகடுகள் மூலம் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கும் மின்சாரத்தையும் கணக்கிட்டு வைக்கும்.

மின் உற்பத்தி


இதன் மூலமாக நாம் அரசுக்கு வழங்கிய மின் அளவை கழித்துவிட்டு, மின்வாரியத்திடம் பெற்ற மின் அளவுக்கு மட்டும் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். இது பெரிய சேமிப்பை உருவாக்கும்.

செலவு

ஒரு கிலோ வாட் மின்சார உற்பத்தி செய்யும் சோலார் தகடுகளை அமைக்க ரூ.70 ஆயிரம் வரை செலவாகும். ஒரு கிலோ வாட் மூலமாக நாள் ஒன்றுக்கு 4.5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஒரு நடுத்தர குடும்பத்திற்கு 3 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் சோலார் தகடுகள் தேவைப்படும். எனவே இதனை அமைக்க ரூ.2 லட்சம் வரை செலவாகும். வீட்டு உபயோகிப்பாளர்கள் இந்த முதலீட்டை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் திரும்பப் பெற்றுவிட முடியும். தொழிற்சாலைகள் 3 முதல் 5 ஆண்டுகளில் திரும்பப் பெறலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பராமரிப்பு

சோலார் தகடுகளுக்கு பராமரிப்பு செலவுகள் மிக மிகக் குறைவு. இன்வர்டருக்கு 10 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கிறது. சோலார் தகடுக்கு 25 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கிறது. சோலார் தகடு மீது தூசி படிந்திருந்தால் மின் உற்பத்தி குறைவாகும். எனவே மாதம் ஒரு முறை சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதுமானது.

மின் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், வரும் காலங்களில் நமது மின் பயன்பாடும் அதிகரிக்கும். எனவே இப்போதே சோலார் தகடுகளை அமைத்து மின் உற்பத்தியை தொடங்கினால் நமது செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாங்குவது சுலபம்

தொழில் நகரான கோவையில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சோலார் பேனல்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இங்கு எண்ணற்ற நிறுவனங்கள் சோலார் பேனல்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சூழலில், கோவை வாசிகள் சோலார் பேனல்களை எளிதாகவும், குறைவான விலையிலும் வாங்கிவிட முடியும்.

சோலார் பேனல்கள் குறித்த விவரங்கள் மற்றும் வாங்க நினைப்பவர்கள் கோவை-அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சோலார் பாயிண்ட் என்ற நிறுவனத்தை ( சந்தோஷ் குமார் : 99943 58989 ) தொடர்பு கொள்ளலாம்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி