பள்ளிப் படிப்பையும், கல்லூரி இளநிலை படிப்பையும் முடித்துவிட்டு அடுத்து எந்த கல்லூரியில் சேரலாம் என்று சிந்திக்கும் மாணவர்களே, இந்த செய்தியில் கோவை அரசு கலைக்கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள், மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடுகள் குறித்து தொகுத்து வழங்கியுள்ளோம்.
கோவை அரசு கலைக்கல்லூரி கடந்த 1852ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இந்த கல்லூரி பல பரிணாமங்களைக் கண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஆண்கள் கல்லூரியாக செயல்பட்ட இக்கல்லூரி பிற்காலத்தில் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்னதாகவே இந்த கல்லூரி தொடங்கப்பட்டது இதன் சிறப்பு.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பி.காம்., பி.காம். சிஏ., பிபிஏ உள்ளிட்ட 23 இளநிலை பட்டப் படிப்புகளும், 21 முதுகலை படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர 16 பாடப்பிரிவுகளில் எம்.பில் மற்றும் பி.ஹெச்டி படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர் சேர்க்கைக்கான இடங்கள்
கோவை அரசு கலைக் கல்லூரியை பொறுத்தவரை அனைத்து பாடப்பிரிவுக்கான இளநிலைப் படிப்புகளுக்கும் சேர்த்து 1,433 சீட்டுகள் உள்ளன. முதுகலைப் படிப்புகளுக்கு 587 சீட்டுகள் உள்ளன.

கல்லூரி வளாகம்
இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஷிப்ட் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. முதல் ஷிப்ட் காலை 8.45 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 1.45 மணி முதல் மாலை 6.45 மணி வரை நடைபெறும்.
ஆண்களுக்கான கல்லூரியாக இருந்தது பிறகு பெண்களுக்குமாக சேர்ந்து செயல்படத் தொடங்கியதால் இங்கு மாணவர்களுக்கு 70 சதவீத சீட்டுகளும், மாணவிகளுக்கு 30 சதவீத சீட்டுகளும் வழங்கப்படுகிறது. இதற்காகவே சமீபத்தில் புலியகுளம் பகுதியில் பெண்களுக்கென செயல்படும் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
கட்டணம்
இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் என்பது மிகமிகக் குறைவாக உள்ளது. முதல் தலைமுறையாக மாணவர் கல்லூரி படிப்பில் சேருகிறார் என்றால் ரூ.2000 மட்டும் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

கோவை அரசு கலைக்கல்லூரி
மாணவர்களுக்கான பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை உள்ளிட்டவற்றை கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
விடுதி வசதி
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதுபோக கல்லூரிக்கு வெளியே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித், பழங்குடியின மாணவர்களுக்கென அரசு விடுதிகளும் உள்ளன. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் இந்த விடுதிகளில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
முதுகலை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் கல்லூரியில் விடுதி வசதி உள்ளது. இந்த விடுதி முழுமையாக நிரம்பாத பட்சத்தில் இளங்கலை மாணவிகளுக்கும் விடுதியில் இடம் கிடைக்கும்
அதிகாரம் மற்றும் அங்கீகாரம்
கோவை அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு நடைமுறைகளை கல்லூரி நிர்வாகமே மேற்கொள்ளும். மாணவர்களுக்கான பட்டங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும்.

கோவை அரசு கலைக்கல்லூரி
நாக் (NAAC) இந்த கல்லூரிக்கு B அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தர வரிசையின் படி இந்த கல்லூரி அகில இந்திய அளவில் செயல்படும் அரசு கலைக்கல்லூரிகளில் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டின் படி, இந்தியாவில் செயல்படும் ஒட்டுமொத்த கலைக்கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 42வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது கோவை அரசு கலைக்கல்லூரி.

கோவை அரசு கலைக்கல்லூரி
பேராசிரியர்கள்
கோவை அரசு கலைக் கல்லூரியில் ஏறக்குறைய 240 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்காமல் அவர்களின் தனித்திறன் மேம்பாட்டிற்கும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆளுமைத்திறன்
இந்த கல்லூரியில் மாணவர்களின் ஆளுமைத்திறன் மற்றும் தனித்திறமைகளை மேம்படுத்தும் விதமாக என்.சி.சி (NCC) மூன்று யூனிட்டுகளும், என்.எஸ்.எஸ் (NCC) 4 யூனிட்டுகளும், வை.ஆர்.சி (YRC) இரண்டு யூனிட்டுகளும் செயல்படுகின்றன. இவை தவிர ஈ-கோ கிளப், போக்குவரத்து விழிப்புணர்வு கிளப் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. மாணவர்கள் தன்னார்வமாக இந்த அமைப்புகளில் ஒன்றில் பணியாற்றியிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
ஆண்டுதோறும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தி மாணவர்களை பணியில் சேர்க்கின்றனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி கூறுகையில்,
"இக்கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் தனித்திறனையும், நேரம் தவறாமையையும் கற்றுக் கொடுக்கிறோம். மாணர்வகளின் தனித்திறனை அடையாளம் கண்டு அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூகத்தில் கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை முறைகள் பாடத்தோடு கற்றுக் கொள்ளப்படுகிறது.
இருபாலர் கல்லூரி என்பதால் எப்போதும் ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கிறார்கள். கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்கின்றனர்.

முதல்வர் கலைச்செல்வி
படிப்பை முடித்து மாணர்வகள் கல்லூரியைவிட்டு வெளியேறும் போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறோம்.
மாணவர் சேர்க்கை 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையுடனும், யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாகவும் நடைபெறுகிறது. அரசு அறிவிப்பு வெளியிடும் போது, அரசு கொடுக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை படிப்பிற்கு மட்டும் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. அரசின் அறிவிப்பு வெளியானதும் மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்." என்றார்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் இத்தனை சிறப்பம்சங்கள் இருக்க "பெஸ்ட் காலேஜ் எது?" என்று கூகுளை புரட்டாமல், +2 ரிசல்ட் வந்ததும் அப்ளிகேஷனை போட்டுவிடுங்கள் மாணவர்களே..!
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.