கோவையில் செயல்பட்டு வரும் எல்.ஜி (ELGi) நிறுவனம் உலகின் முன்னணி ஏர்- கம்ப்ரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கடந்த 62 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனமானது தற்போது உலகின் தரமான ஏர் கம்ப்ரஸர் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் 1,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு மேலாண்மை துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் போது முதலில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு ரூ.8 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஏர் கம்ப்ரஸர்கள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தற்போது இந்த நிறுவனம் 'எல்.டி சீரீஸ் டூ-ஸ்டேஜ் டைரெக்ட்-டிரைவ்' என்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கம்ப்ரஸரை உருவாக்கியுள்ளது.

ELGi ஏர் கம்ப்ரஸர்
பெல்ட் இல்லாத, மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கும் வகையிலும், இரண்டு கம்பிரசர்கள் யூனிட்டுகளுடன் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து உலக நாடுகளுடன் போட்டியிடும் இந்த நிறுவனம் கோவையின் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறது.
இதுகுறித்து எல்.ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில், "ஆரம்பக்காலத்தில் இந்த நிறுவனத்திலிருந்து பல மாறுதல்களை செய்துள்ளோம். உலகளவில் தற்போது 6வது இடத்தில் உள்ளோம் வரும் 2035க்குள் முதல் 3 இடங்களில் இருக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கிறோம். எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் தரத்தில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நிறுவன ஊழியர்களுடன் திரு. ஜெயராம் வரதராஜ்
இந்த நிறுவனத்திற்கு உயிர் கொடுப்பது மக்கள் தான். உலகத்தரத்தில் ஒரு நிறுவனம் இருக்க வேண்டுமானால், ஊழியர்களின் பொருளாதாரத்தில் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டு செயல்படுகிறோம். இதனால் தான் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய காரணம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆற்றல் திறன், தொழில்துறையில் முன்னணி நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றின் முக்கிய நன்மைகளை வழங்கும் இயந்திரங்களை தயாரிக்கிறோம்." என்றார்.
ELGi நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் இந்த இணையதள முகவரியை காணலாம் :
https://www.elgi.com/in/
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.