தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். முன்னதாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பி பிரிவில் பணியாற்றி வந்தார்.
காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த போது மதம் சார்ந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டு பிரச்சனைகளை சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் வெற்றிச்செல்வன். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும் கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதைப் பெற்றுள்ளார்.
இதனிடையே எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறார் காவல் அதிகாரி.
வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினி. பி.எஸ்.டி படித்து வரும் இவருக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தை மதத்தை கடந்து நடத்த முடிவெடுத்த வெற்றிச்செல்வன், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார்.
தொடர்ந்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்விவினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் திருமண பத்திரிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் திருமண பத்திரிக்கையில், "உடம்பொடு உயிரிடை என்னமற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு." என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பத்திரிக்கை சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, காவல்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ள நிலையில் இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வானது வரும் 24 மற்றும் 25 அகிய தேதிகளில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தி நடைபெற உள்ளது. இதில் காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News