கோவை: "குளு குளுவென இருக்கும் கோவையில் சுற்றுலாத்தலங்களுக்குத் தான் சற்று பஞ்சம் என்று பேசுபவரா நீங்கள்." பரளிக்காடு சூழல் சுற்றுலா குறித்து தெரிந்து கொண்டு கோடை விடுமுறையை கொண்டாடுங்கள்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த பூச்சிமரத்தூரை அடுத்து அமைந்துள்ளது பரளிக்காடு. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 30 கிலோ மீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து பில்லூர் செல்லும் சாலையில் 36 கிலோ மீட்டர் பயணித்தால் முள்ளி என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியை அடையலாம்.
இந்த வனத்துறை சோதனைச் சாவடியை கடந்தபின்னரே பரளிக்காட்டை அடையலாம். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அடர்த்தியான காடு, பில்லூர் ஆறு, சுத்தமான காற்று, மலை வாழ் மக்களின் உணவு, பரிசல் பயணம் என்று உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது இந்த சுற்றுலா.
சனி, ஞாயிறு மட்டுமே அனுமதி
பரளிக்காடு சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நினைத்தவுடன் இந்த சுற்றுலாத்தலத்திற்கு சென்றுவிட முடியாது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த சுற்றுலாத்தலத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.
https://coimbatorewilderness.com/ என்ற இணையப் பக்கம் மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்திய பின்னரே பரளிக்காடு செல்ல முடியும்.
கட்டணம் - நேரம்
பரளிக்காடு சுற்றுலா மையத்திற்கு அருகிலேயே பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. இந்த பகுதிகளுக்குச் செல்ல காலை 10 மணி முதல் மறு நாள் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தங்கும் இடங்கள் வனத்துறையினரே அமைத்துக் கொடுத்துள்ளனர். இங்கு செல்ல பெரியவர்களுக்கு ரூ.500 சிறியவர்களுக்கு ரூ.400 கட்டணம் வழங்கப்படுகிறது. பூச்சிமரத்தூர் சுற்றுலாவுக்கு மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயணம்
கோவையில் இருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்திற்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை. சொந்த வாகனங்களில் அல்லது வாடகை வாகனங்களில் தான் செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்திற்கு அனுமதி இருந்தாலும், வனப்பகுதிகளுக்குள் செல்லும் போது விலங்குகள் அச்சுறுத்தல் இருக்கும். எனவே கார், வேன் போன்ற வாகனங்களில் செல்வது பாதுகாப்பான பயணமாக இருக்கும்.
சுற்றுலா
இந்த சுற்றுலாத்தலம் சூழ வனப்பகுதி என்பதால், மிக அருமையான சீதோஷ்ன நிலை இருக்கும். வளைந்து நெளிந்து செல்லும் பில்லூர் ஆறு மற்றும் அடர்த்தியான ஈரக்காற்று உங்கள் மனதுக்கு புத்துணர்வை கொடுக்கும். ஆற்றில் குளிக்க அனுமதி உண்டு. இதையடுத்து பரிசல் பயணம். நகர வாசிகளுக்கு அறிமுகமில்லாத பரிசல் பயணத்திற்காகவே பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.
உணவு
பரளிக்காடு சுற்றுலாத்தலத்தின் மற்றொரு சிறப்பு என்பது உணவு. மூன்று வேளைகளிலும் மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. பாரம்பரியமான உணவு வகைகளை இந்த பயணத்தில் நீங்கள் உண்ண முடியும்.
அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் உணவு, பரிசல் பயணம், அதிகாலை ஆற்றில் நீராடல், காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ரசித்திட இப்போதே புறப்படுங்கள்..!
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.