கோவை மாவட்டம் அன்னூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்கு கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால் தங்கமணியை கொலை செய்ததாக கைதான நபர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்த தங்கமணி என்பவர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை தங்கமணியின் கணவர் சுப்பிரமணி வீடு திரும்பிய போது, மனைவி தங்கமணி கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக அன்னூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தங்கமணி வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த நிலையில் இந்த கொலை, பண விவகாரம் தொடர்பாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தங்கமணியை கொலை செய்த நபர்கள் தடயத்தை மறைக்க பெண்ணின் உடலைச் சுற்றிலும் மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி சென்று இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்கமணியின் உறவினரான கன்னியப்பன் என்பவரையும் அவரது நண்பர் சுதாகர் என்பவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கன்னியப்பனும், சுதாகரும் சேர்ந்து தங்கமணியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தங்கமணியிடம் கன்னியப்பன் கடந்த 2020ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதும், கடனை திருப்ப செலுத்த முடியாமல், வட்டியும் கொடுக்க முடியாமல் இருந்த நிலையில் தங்கமணி பணத்தை தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனையடுத்து தங்கமணியை கொலை செய்ய திட்டமிட்ட கன்னியப்பன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிலிருந்த உளியால் தங்கமணியின் கழுத்தை தனது நண்பர் சுதாகருடன் சேர்ந்து அறுத்து கொலை செய்ததாக இருவரும் ஒப்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: சு.குருசாமி, கோவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Murder