கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரமாண்ட உருவம் கொண்ட பாகுபலி என்றழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவ்வப்போது உலா வந்தபடி உள்ளது.
காட்டை விட்டு வெளியேறும் யானைகள் மக்கள் வசிக்கும் பகுதி வழியே அடிக்கடி கடந்து சென்றபடி உள்ளதால் ஆற்றங்கரையோரம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை பத்திரகாளியம்மன் செல்லும் சாலையை கடந்து சமயபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த சிறு வீதி வழியே எவ்வித தயக்குமும் இன்றி சாவகாசமாக நடந்து வந்தது. ஏற்கனவே பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினரின் எச்சரிக்கை காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் முடங்கி விட திடீரென யானையை பார்த்த மேய்ச்சலில் இருந்த மாடுகள் மிரண்டு ஓடின.
பின்னர் அங்கிருந்த விவசாய தோட்டத்தை யானை கடந்து சென்ற போது அங்கிருந்த நாயொன்று அதனை பார்த்து குரைத்தபடி இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகுபலி நாயை நோக்கி திரும்பி நின்று அதனை முறைத்தபடி எச்சரித்து விட்டு பவானி கரையோர பகுதிக்கு கடந்து சென்றது. இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் படமெடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பவானி கரையோர பகுதிக்கு சென்றுள்ள பாகுபலி யானை மீண்டும் வந்த வழியே நெல்லிமலை வனப்பகுதிக்கு செல்லும் என்பதால் வனத்துறையினர் அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..
செய்தியாளர்- எஸ்.யோகேஸ்வரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News