கோவை மெட்ரோ திட்டம் குறித்த பேசாத நபர்களே இருக்கமாட்டார்கள் என்ற அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மெட்ரோ திட்டம் குறித்து கோவையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கடந்த மார்ச் மாதமே முதல் ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது.
கோவையில் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, சிறுவாணி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மொத்தம் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்றும், முதல் கட்டமாக உக்கடத்திலிருந்து அவினாசி சாலை கணியூர் வரையிலும், சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டம் அதற்கு அடுத்தபடிக்கு செல்லவில்லை. காரணம் கோவையில் தற்போது அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்றால் சாலையில் தான் அமைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இதனிடையே சாலைகள் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு ஏற்ற வகையில் அகலமாக உள்ளனவா? என்றால் இல்லை என்பதே உண்மை. சாலைகளை அகலப்படுத்தி மெட்ரோ ரயில் தடம் அமைப்பது என்பது உடனடியாக முடியும் காரியமல்ல. ஏனென்றால் நகரின் ஒட்டுமொத்த பகுதியிலும் மெட்ரோ திட்டத்தைக் கொண்டுவர பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
மேம்பாலங்களால் தான் இந்த நிலைமை என்று அறிந்த அதிகாரிகள், சிங்காநல்லூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இதுவரை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தத்தளித்து வருகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டமாக இருக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் தமிழக நிதி அமைச்சர். அதன்படி, அவினாசி சாலை மற்றும் சத்தி சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கிடைத்த பதிலில் இத்திட்டத்திற்காக 9 ஆயிரத்து 424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது தமிழக அரசு இதனை உறுதி செய்துள்ளது. அரசு இயந்திரம் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளும் போது அடுத்து 5 ஆண்டுகளுக்குள் கோவையில் உள்ள முக்கிய சாலையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Metro Train