புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ராமன். 80 வயதான இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் தனியார் பேருந்தின் நடத்துநராக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இவரது வலது கை துண்டானது. இந்த நிலையில், இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலை கிடைத்தது. 37 ஆண்டுகாலம் ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலை செய்த பின்னர் இவர் பணி ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்
கோவை தடாகம் பகுதியில் குடிபெயர்ந்தார்.
தனது வாழ்க்கை காலம் முழுவதிலும் உழைக்க வேண்டும் என்று முனைப்போடு இருக்கும் இந்த முதியவர் தள்ளாத வயதிலும், ஒற்றைக் கையோடு சைக்கிளில் நகர் முழுவதும் பயணித்து கூரியர் விநியோகம் செய்து வருகிறார்.

ஸ்ரீ ராமன்
தடாகம் பகுதியில் இருந்து தினமும் சாய்பாபா காலனி வரை பயணித்து தனியார் கூரியர் நிறுவனத்திற்கு வரும் இவர், அங்கு பார்சல்களை பெற்றுக் கொண்டு வீடு வீடாக சைக்கிளில் சென்று விநியோகம் செய்கிறார். ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணிக்கிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் சர்வ சாதாரணாமாக தனது பயணத்தை மேற்கொள்ளும் இந்த முதியவர் நாள் ஒன்றுக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் கோவையை வலம் வருகிறார்.

ஸ்ரீ ராமன்
"எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் காலை வீட்டு வேலைகளை முடித்துவிட்டு நானே சமைப்பேன். கூரியர் நிறுவனத்தின் மூலம் ரூ.7 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. எனக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் எந்த சிரமமும் இல்லை. என் வாழ்க்கை முழுவதும் உழைத்தே கழிப்பேன்." என்கிறார் ஸ்ரீ ராமன்.
நம்பிக்"கை"யோடு உழைக்கும் இந்த முதியவர் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக உள்ளார் என்றால் அது மிகையாகாது.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.