கோவையைச் சேர்ந்த சிறுதுளி தன்னார்வ அமைப்புக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ் விருது வழங்கி, ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார். இதனிடையே விருது தொகையை வைத்து அடுத்த கட்ட பணிகள் என்ன? சிறுதுளியின் அடுத்த நகர்வுகள் என்பது குறித்து அந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து வனிதா மோகன் கூறியதாவது:-
நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துதல் சிறுதுளியின் முக்கிய குறிக்கோள்களாகும். குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் புதிய குளங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 17 ஏரிகள், 20 குளங்கள், 7 ஊடுநீர் குளங்கள், 30 ஓடைகள் மற்றும் 10 தடுப்பணைகள் மூலம் 86 லட்சம் கன மீட்டருக்கு மேல் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 800க்கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் மரங்களைக் கொண்ட அடர்த்தியான மியாவாக்கி தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுதுளி தற்போது புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், கடலூர், சென்னை போன்ற இடங்களில் நீர் சேமிப்பு பணிகளை துவங்கியுள்ளது.
இனி வரும் காலகட்டத்தில் நிலத்தடி நீரில் தரத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்தப்படும். தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்ட இந்த வெகுமதி தொகையான 10 லட்சம் வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசிபுரம் பகுதியில் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். அப்பகுதியில் உள்ள பல தடுப்பு அணைகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக சிறுதுளி அடுத்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஐ.ஐ.டி மற்றும் நீர் மேலாண்மை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் நிலத்திற்குள் கழிவு நீரை சுத்தப்படுத்திட திட்டங்களை அமல்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Coimbatore, Local News