இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவைப் போன்ற சிறப்பம்சங்களுடன் கோவையில் செம்மொழி பூங்காவானது 165 ஏக்கரில் இரு கட்டங்களாக அமைக்கப்பட இருக்கின்றது. முதல்கட்டமாக 45 ஏக்கரில் பூங்கா அமைக்க 172.21 கோடி நிதியானது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது .
கோவையில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் பொழுது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் நினைவாகக் கோவை மத்தியச் சிறை இருக்கும் பகுதியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அறிவித்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், செம்மொழி பூங்கா திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டது. கோவை மத்தியச் சிறையின் வாயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த செம்மொழிப் பூங்கா என்ற பெயர்ப் பலகையினை அகற்றி, மீண்டும் கோவை மத்தியச் சிறை என்ற பெயர்ப் பலகையே வைக்கப்பட்டது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த நிலையில், கலைஞர் கருணாநிதி அறிவித்த அதே இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவை மத்தியச் சிறையானது, மேட்டுப்பாளையம் அருகே காரமடைப் பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கோவை மத்தியச்சிறை இருக்கும் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருக்கும் நிலையில், இந்த பணிகள் இரு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவிலும், இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் பரப்பளவிலும் செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க 172.21 கோடி நிதியானது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அது தொடர்பான ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இது போன்ற பூங்கா இல்லாத நிலையில், அதே சிறப்பம்சங்களுடன் செம்மொழி பூங்காவானது அமைக்கப்பட இருக்கின்றது.
Also Read : வாயில் காயம்... சாப்பிட முடியாமல் தவித்த யானை உயிரிழப்பு! - பொள்ளாச்சி அருகே சோகம்!
இந்த செம்மொழி பூங்கா வளாகத்தில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா,மூலிகைப்பூங்கா என 16 வகையான பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றது. மேலும் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வகையில் குறிச்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகிய வனங்களும் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த செம்மொழி பூங்காவில் விஷேச மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், திறந்தவெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்தம், ஓய்வு அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவையும் அமைக்கப்பட இருக்கின்றது.
பொதுமக்கள் இயற்கை சூழலை அறிந்துகொள்ளவும், தாவர இனங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும், நீலகிரி உயிர்க்கோளப் படுகையில் உள்ள அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் ஆளுமையை நிறுவி அதனை மேம்படுத்தவும் செம்மொழி பூங்காவானது கோவை நகரின் மையப்பகுதியான மத்தியச்சிறை வளாகத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Park, TN Budget 2023