Home /coimbatore /

கோவையில் புகழ் பெற்று விளங்கும் 10 கோவில்கள் - சிறப்பும் பக்தர்களின் நம்பிக்கையும்!

கோவையில் புகழ் பெற்று விளங்கும் 10 கோவில்கள் - சிறப்பும் பக்தர்களின் நம்பிக்கையும்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் உள்ள சிறப்பு வாய்ந்த 10 கோவில்கள் அதன் சிறப்புகள் மற்றும் அங்கே நிலவும் நம்பிக்கைகள் பற்றிய இங்கே காணலாம்.

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
 • Coimbatore, India
  கோயம்புத்தூர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் கேரள மாநிலம், வடக்கில் கர்நாடக மாநிலம் இதற்கிடையில் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள கோவை நீண்டகாலம் தொட்டு சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. இங்குள்ள கோவில்களும் அங்கே நிலவும் நம்பிக்கைகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், கோவையில் உள்ள சிறப்பு வாய்ந்த 10 கோவில்களை பற்றி இங்கே அறியலாம்.

  மருதமலை முருகன் கோவில்

  கோவையில் குழந்தையின் அழகுடன் வசீகரமாக மலையில் வீற்றிருக்கிறான் மருதமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. கோவை ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் இருககும் இந்த கோவிலில் முருக பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் விரும்பும் இடமாக அமைந்துள்து. வேறெங்கும் காணமுடியாத வகையில் இங்குள்ள முருகன் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் சிலை இக்கோவிலில் உள்ளது.

  மருதமலை முருகன் கோவில்


  திருமணம் மற்றும் பிள்ளைவரம் வேண்டி புனித கயிறு மற்றும் தொட்டில்களை பக்தர்கள் கட்டுகின்றனர். இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தரின் சந்நிதியில் தரப்படும் விபூதி பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது என பக்தர்கள் கூறுகின்றனர்.

  மலை அடிவாரத்தில் இருந்து மலைமீது உள்ள கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி இருக்கிறது. தனி வானங்களில் சென்றும் முருகனை தரிசித்து வரலாம்.

  தென்னாட்டுக் காசி - அவினாசி லிங்கேஸ்வரர்

  தென்னாட்டுக் காசி என்ற அழைக்கப்படுகிறது அவினாசி லிங்கேஸ்வரர் கோவில். ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது என்று பொருள். ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருபடுகிறது. அதன்படி அழிவு இல்லாத திருக்கோவிலாக இந்த அவினாசி கோவில் கருதப்படுகிறது.

  சுந்தரரின் வேண்டுதலின்படி, முதலை உண்ட சிறுவன் மீண்டு வந்ததாக சொல்லப்படும் கதை இந்த கோவிலில் நடந்ததாக கருதப்படுகிறது. ஐந்து வயது உடைய சிறுவனை முதலை விழுங்கிய நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேயே முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று சுந்தரர் அவினாசியப்பரின் வேண்டிக்கொண்டார். அதன்படி, முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அந்த பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இந்த கோவில்தான்.

  இது கோவையிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் சிற்பங்கள் நிறைந்த இந்த கோவில் முற்காலத்தில் பெரிய கோயில் என்று அழைக்கப்பட்டது. கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் கோவை மாவட்டத்தின் உள்ள மற்றக் கோயில்களைவிடப் பெரியதாகும்.

  ஈச்சனாரி விநாயகர் கோயில்

  தெய்வீகம் ததும்பும் ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவையில் இருந்து பொள்ளாட்சி பிரதான சாலை 13 கி.மீ தொலைவில் உள்ளது. இறையருள் வேண்டும் பக்தர்கள் விரும்பிச் செல்லும் கோவிலாக திகழ்கிறது.

  மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் என அழகாக காட்சியளிக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற இடமாக இருந்து வருகிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோவிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாகும்.

  ஈச்சனாரி விநாயகரை வழிபட்டால் வேலைகளில் உள்ள தடைகள், தாமதங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  காரமடை ரெங்கநாதர் கோவில்

  கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில். இங்கே லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். கொங்கு மண்டலத்தின் செல்வ வளத்துக்கு காமதேனுவாக அமைந்த தலம் இந்தத் தலம்.

  ரெங்கநாதர் கோவில்


  செல்வ வளம் தரும் சீர் அரங்கநாதரின் அருளை பெற இங்கே எண்ணற்றோர் வந்து வணங்கி செல்கின்றனர். இங்கே ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோவில் கோவை பேருந்துநிலையத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்து.

  பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

  மிகப் பழமையான கோவில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு பங்குனி உத்திரத் திருநாள் சிறப்புக்குரியது. மற்ற கோயில்களைப் போல சிவலிங்கம் இல்லாமல், இங்குள்ள பட்டீஸ்வரர் சிவ லிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு இருப்பதை இன்றும் நம்மால் காண முடியும்.

  கோயிலின் முன் ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் உள்ளது. இந்த கோயிலில் உள்ள புளியமரத்தின் விதையை நாம் எங்கு எடுத்து சென்று விதைத்தாலும் அது முளைக்காது என்று சொல்லப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மாட்டு சாணத்தில் கூட புழுக்கள் வராது என்று கூறுகின்றனர்.

  இந்த கோவிலில் பல்வேறு கலை நயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரங்கள், மண்டபங்கள், தூண்கள் நிறைந்துள்ளன. எல்லா சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இந்த கோயிலில் காணலாம். இந்த திருக்கோயில் கோவையிலிருந்து சிறுவாணி பிரதான சாலை 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

  மாசாணியம்மன் கோவில்

  கோவை பொள்ளாச்சியில் மலைகள் சூழ இயற்கை அழகு அமைந்துள்ளது மனக்குறைகளை தீர்க்கும் மாசாணியம்மன் ஆலயம். எல்லா கோயிலிலும் நின்ற நிலை அல்லது அமர்ந்த நிலையில் அம்மனை பார்த்திருப்போம். ஆனால் இந்த மாசாணியம்மன் கோவிலில் 17 அடி சயனக் கோலத்தில் அருள்புரிகிறார் மாசாணியம்மன்.

  இந்த கோவிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. மேலும், இங்கே ஒரு சுவாரசியமான நம்பிக்கை நிலவுகிறது. கல்லாக உள்ள அம்மனுக்கு மிளகாய்ச் சாந்து பூசினால் தொலைந்துபோன விலைமதிப்புள்ள பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோவில், பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

  கொங்கு நாட்டு திருப்பதி

  கொங்கு நாட்டின் புகழுக்குரிய புனிதத் தலமா திகழ்கிறது நைனார்க்குன்று. இதை மக்கள் கொங்கு திருப்பதி என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷமானவை. அந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் பக்திப் பெருக்குடன் வழிபடுவர்.

  கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள ஏழுமலைகளின் உச்சியில் பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த காரணத்தால் இந்த தலம் கொங்கு நாட்டு திருப்பதி என அழைக்கப்படுகிறது. மலைமேல் உள்ள பெருமாள் கோவிலுக்கு போகும் வழி வனப்பகுதியாக இருப்பதால் புரட்டாசி மாதங்களில் மட்டுமே அங்கு வழிபாடு நடைபெறுகிறது.

  தண்டுமாரியம்மன் கோவில்

  கோயம்புத்தூர் கோட்டையில் வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சியளிக்கிறார். மைசூர் மன்னன் திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்க்க படை திரட்டினார். அப்போது தனது படைகளுடன் கோவை கோட்டைக்குள் அவர்கள் முகாமிட்டிருந்த போது தண்டுமாரி அம்மன் தனது இருப்பிடத்தை உணர்த்தி வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  துர்கையின் அம்சமாக வீற்றிருக்கும் இத்ந தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்த்து மக்களின் குலம் தழைக்க துணைபுரிகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

  வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்

  வெள்ளியங்கிரி மலை, மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் சுமார் 3000 ஆண்டு பழமையான கோவில்களாக கருதப்படுகின்றன. இகே இருக்கும் சிவபெருமான் ‘வெள்ளியங்கிரி ஆண்டவர்’ என்றும் அம்பாள் ‘மனோன்மணி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

  சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவில். புராணங்களின் படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் இப்பகுதிக்கு வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி, அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார். இறுதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு, தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார் என்று சொல்லப்படுகிறது.

  இயற்கை அழகுமிக்க வனங்கள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைதொடர்களில் அமைந்துள்ளது இந்த வெள்ளியங்கிரி மலை. இந்த மலைகளுக்கான புனித யாத்திரை மார்ச் முதல் மே மாதங்கள் வரை மேற்கொள்ளப்படுகிறது. புனித யாத்திரை மேற்கொள்ளமுடியாதவர்கள் இந்த மலை அடிவாரத்திலுள்ள கோவிலிலேயே வழிபட்டு திரும்புகின்றனர். 50 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயணம் கொண்டது இந்த வெள்ளியங்கிரி யாத்திரை.

  சங்கமேஸ்வரர் கோயில்

  சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கோட்டை ஈஸ்வரன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கிறார் சங்கமேஸ்வரர். இந்த சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. தாயார் அகிலாண்டேஸ்வரி. முருகப் பெருமானின் ஆறு முகங்களும் முன்னும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கிய வண்ணம் இருப்பது வழக்கம். ஆனால் இங்கே, ஒரே திசையை நோக்கிய ஆறுமுகங்களை கொண்ட முருகனாக காட்சியனிக்கிறார்.

  இங்கே, சித்திரையில் 13 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் மற்றும் விஜய தசமி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு வேண்டிக்கொண்டால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்பபிரச்சனைகள் தீரும், தொழில்விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  Published by:Karthick S
  First published:

  அடுத்த செய்தி