சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைனில் பணம் முதலீடு செய்து சம்பாதிக்க திட்டமிட்ட மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள ஆப் மூலமாக பணத்தை முதலீடு செய்துள்ளார். இதனால் அவர் 35,000 ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டார்.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள தனது குடும்பத்தினருக்கு மேலும் நிதி சுமையை ஏற்படுத்தி விட்டதாக எண்ணிய மகாலட்சுமி கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இந்நிலையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆன்லைன் மோசடி கும்பல் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பதுங்கியிருந்து தங்கள் மோசடி வேலைகளை செய்து வந்தது தெரியவந்தது. இழந்த தொகையானது 35,000 ரூபாய் என்றாலும் வழக்கின் தீவிர தன்மையை கருதி மோசடிக் கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
மோசடி கும்பல் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை ஆய்வு செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை திரட்டினர். மோசடி செய்த பணத்தை எந்த ஏடிஎம்மில் இருந்து எடுக்கிறார்கள் என கண்காணித்து வந்த போலீசார் ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் தங்கள் செல்போன் எண் மூலம் ஸிவிக்கியில் உணவு ஆர்டர் செய்துள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் ஸ்விக்கி நிறுவனம் மூலம் குற்றவாளிகள் தங்கியிருந்த முகவரி தெரிய வந்தது. உடனே அப்பகுதிக்கு சென்ற போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் அமனுல்லாகான், முகம்மது பைசல், முகமது ஆசிப் இக்பால் என தெரியவந்தது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணை பல திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
இன்ஸ்டாகிராமில் போலி பெயர்களில் ஐ.டி.க்களை உருவாக்கி 3 பேரும் பலரிடம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 750 முதல் 5000 ரூபாய் வரை செலுத்தினால் 24 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கும் என நம்பவைத்துள்ளனர்.
முதற்கட்டமாக சிறிதளவு பணத்தை gpay மூலமாக செலுத்தி ஆசையை தூண்டிவிட்டு, தொடர்ந்து பல காரணங்களை கூறி பணத்தை பறித்துள்ளனர். செயல் முறை கட்டணம், வருமான வரி, ஜி எஸ் டி என கூறி தற்கொலை செய்த மாணவியிடம் மட்டும் சுமார் 35,000 வரை பறித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பொழுதுபோக்காக அப்பகுதியில் இருக்கும் சைபர் க்ரைம் கும்பல் மூலம் ஆன்லைன் மோசடிகளை கற்றுக்கொண்டு பலரிடம் பண மோசடி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபோன்று இன்ஸ்டா மோசடி கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
விசாரணைக்குப் பிறகு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டதை மாற்றி தற்கொலைக்கு தூண்டுதல், மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Cyber crime