அழுத்தம் மிகுந்த இன்றைய வாழ்க்கை சூழலில் நம்மைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் தான் நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்கின்றன. எதிர்பாராத போது பெய்யும் மழை, சாலையில் நம்மைக் கடந்துச் செல்லும் குழந்தையின் புன்னகை, நெரிசல் மிகுந்த பேருந்து அல்லது ரயிலில் திடீரென நமக்குக் கிடைக்கும் இருக்கை என அந்தத் தருணங்களை பட்டியலிடலாம்.
அந்த வகையில் நம்மை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பவை செல்லப்பிராணிகள். நிறையப் பேருக்கு பறவைகளை வளர்க்கப் பிடிக்கும். அவற்றின் சத்தமே அவர்களுக்கு மெல்லிசையாக ஒலிக்கும். லவ் பேர்ட்ஸ், புறா, கிளி என ஆயிரக் கணக்கில் செலவு செய்து பறவைகளை வளர்ப்பது பொருளாதார வசதியுடயவர்களுக்கு எளிதான காரியம். அதே நேரத்தில் இயற்கையிலேயே நம்முடன் இருந்த பல பறவை இனங்களை இன்று காண முடியவில்லை. அதில் முக்கியமான ஒன்று தான் சிட்டுக்குருவி. தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் இக்குருவியின் பெருமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடலில் ’குரீஇ’ எனக் குறிப்பிடப்பட்டு, பிற்காலத்தில் அதுவே குருவியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சங்க இலக்கியங்களில் சிட்டுக்குருவி ’மனையுறைக் குருவி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தனை பெருமை வாய்ந்த இக்குருவி இனம் இன்று அழிந்து வரும் நிலையில் அவற்றை மீட்டெடுத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சாதனா ராஜ்குமார். அடிப்படையில் ஊட்டச்சத்து நிபுணரான இவர், சிட்டுக்குருவியின் மேல் கொண்ட அன்பால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மார்ச் 20-ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படும் இன்று சாதனாவை தொடர்பு கொண்டு பேசினோம்.
சிட்டுக்குருவி தின வாழ்த்துகளோடு அவருடன் பேசத் தொடங்கினோம். “இந்த பயணம் 2009-ல் தொடங்கியது. ஒருநாள் எங்க அம்மா ’குருவியையே காணோம்’ என தேடிக் கொண்டிருந்தார்கள். ‘இங்க தான் எங்கயாச்சும் இருக்கும்’ என சிரித்துக் கொண்டே நான் சொன்னேன். பிறகு இணையத்தில் இது குறித்து அலசியபோது உலகம் முழுக்க பல குருவி இனங்கள் அழிந்து வருவதை தெரிந்துக் கொண்டேன். நான் இருக்கும் பெசண்ட் நகரிலும் தேடிப் பார்த்தபோது ஒரு குருவி கூட இல்லை. அப்போது கார்பெண்டரிடம் சொல்லி மரக்கூடு ஒன்று செய்ய சொல்லி எங்க அம்மா வீட்டில் பொருத்தினேன். அடுத்த நாளே குருவி வந்தது!
பிறகு 50 மரக்கூடு செய்து, அவற்றை எடுத்துக் கொண்டு மெரீனா பீச் சென்றேன். சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு நடைப்பயிற்சிக்கு வருகிறார்கள் என்பதால், அவர்களை டார்கெட் செய்து சிட்டுக்குருவியைப் பற்றி எடுத்துச் சொல்லி கூடுகளை வழங்கினேன். சிலர் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார்கள், சிலர் தயக்கத்துடன் வாங்க மறுத்தார்கள். இப்போது போல அப்போது சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் அவர்களை சமரசம் செய்து கூடுகளை வழங்க, ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. பின்னர் என்னுடைய இந்த முயற்சி குறித்து பிரபல ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியானது. அதைப் பார்த்து பலர் தாங்களாகவே முன்வந்து என்னை தொடர்புக் கொண்டு கூடு கேட்டனர். இன்றுவரை கூடு வாங்குவதற்காக எங்கள் வீட்டுக்கு ஆர்வலர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
சிட்டுக்குருவி நம்முடன் வளர்ந்து வாழ்ந்த ஒரு பறவை. பெரம்பூரில் நான் பிறந்து வளர்ந்த வீடு 100 வருடங்களுக்கும் மேல் பழமையானது. அங்கு நாய், பூனை, செடி, கொடிகளோடு தான் நானும் வளர்ந்தேன். குறிப்பாக எங்கள் வீட்டு மாடியின் ஒருபகுதியை எனது கொள்ளுத்தாத்தா பறவைகளுக்கென்றே ஒதுக்கியிருந்தார். குடும்ப உறுப்பினர் போல, தினமும் எங்களுடன் இருந்த பறவைகள் திடீரென வராததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சிட்டுக்குருவியை மீட்டெடுக்கும் என் பயணத்தை தொடங்கினேன்.
சில வருடங்களுக்கு முன்பு செல்போன் டவரில் இருந்து வரும் ரேடியேஷனால் தான் பறவைகள் அழிந்து வருவதாக ஒரு படம் வெளியானது. அது முற்றிலும் தவறான கூற்று. கதிர்வீச்சால் பறவைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பறக்க முடியாமல் போகுமே தவிர அவை அழியாது. எத்தனையோ காகம், புறா, குருவிகள் டவர் மீது அமர்ந்து இளைப்பாறுவதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம். ரேடியேஷனால் பறவை இனங்கள் அழிகின்றன, என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
சிட்டுக்குருவி மனிதர்களை சார்ந்து வாழ்ந்த ஒன்று. அவற்றிற்கு கூடு கட்ட இப்போது வசதியில்லை என்பதே நிதர்சனம். அந்த காலத்து வீடுகளில் குருவி வந்து செல்ல வழி இருக்கும். அதன்மூலம் அது கூடு கட்டி தனது இனத்தைப் பெருக்கும். ஆனால் இப்போதைய வீடுகளில் காற்று போக கூட வசதியில்லை. ஜன்னலுக்குக் கூட கொசுவலை பொருத்தியிருக்கிறோம். ஆங்காங்கே மரத்தில் கூடு கட்டி முட்டையிட்டாலும், அதனை காகமும், அணிலும் உடைத்துவிடுகின்றன. ஆகையால் குருவிக்கு வீடுகள் தான் தேவை. பறவையினமே இல்லை என்றால், நம்மைச் சுற்றி புழுவும், பூச்சியும் தான் இருக்கும். பின்னர் உணவுச் சங்கிலி பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் குருவி அழிந்தால் அது நமக்கு தான் ஆபத்து. மனிதர்கள் தான் இப்பிரபஞ்சத்தை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறோம். ஆகையால், பிற உயிரினங்கள் வாழ்வதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதை சாப்பிடும் குருவிகள் அழிகின்றன, அந்த நிலத்தில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கே கேன்சர் வருகிறது. முன்பெல்லாம் சென்னையில் பெரும்பாலான வீடுகளில் மாமரம், நித்தியமல்லிச் செடி, கனகாம்பரம் உள்ளிட்டவைகள் இருக்கும், ஆடி மாதத்தில் காய்கறி பயிறிடுவார்கள். இதெல்லாம் தான் குருவிகளுக்கு உணவு. இந்த சூழல் தற்போது இல்லாததால் தான், சிட்டுக்குருவி உள்ளிட்ட மற்ற குருவிகளும் அழிந்து வருகின்றன.
குருவி வீட்டுக்கு வந்து போனால் அவற்றை பார்க்கும் நமக்கும் புத்துணர்வும், நேர்மறை வைப்ரேஷனும் கிடைக்கும். குருவி என்றதுமே பலர் கூண்டில் அடைத்து வைக்க நினைக்கிறார்கள். அது தவறு, அவைகள் சுதந்திரமாக பறக்க வேண்டும். அவற்றிற்கு கூடு அமைத்து, திணை போன்ற தானியங்களை போடுவது தான் நம் வேலை.
நான் இதுவரை மரக்கூடு, டெரக்கோட்டா கூடு (மண்கூடு), காட்போர்டு கூடு என 3 வகைகளில் 7000 இலவச கூடுகளை சிட்டுக்குருவிக்காக விநியோகித்திருக்கிறேன். சென்னை மட்டுமல்லாமல் காஷ்மீர், பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், துபாய் போன்ற இடங்களுக்கும் கூடுகள் வழங்கியிருக்கிறேன். என்னப் பற்றி தெரிந்துக் கொண்டு, வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் சென்னை வரும்போது, என்னிடம் வந்து கூடு வாங்கிக் கொண்டு போவார்கள்.
பறவைகளைப் பற்றியும், அவற்றை எப்படி நம் வீடுகளுக்கு வர வைப்பது என்பது குறித்தும் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பாலவாக்கத்தில் குருவிகளே இல்லை என 5 வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் என்னை வந்து சந்தித்து கூடு வாங்கிச் சென்றார். தொடர்ந்து இரண்டாண்டுகள் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக இறுதியாக சிட்டுக்குருவி வர ஆரம்பித்தது. பின்னர் அங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு கூடு கொடுத்தேன். இப்படி குருவியே இல்லாத இடத்தை, அவைகள் வழக்கமாக வந்து செல்லும் இடமாக மாற்றியதை வெற்றியாகக் கருதுகிறேன்.
ஆரம்பத்தில் சாந்தோமில் கூட குருவிகள் குறைவாக இருந்தது. அங்குள்ள வீடுகளுக்கும் கூடு கொடுத்து, அவற்றை அதிகரிக்க வழி செய்திருக்கிறேன். சிட்டுக்குருவிகள் எளிதில் இனப்பெருக்கமாகும் ஒரு இனம். தமிழ்நாட்டுக்கு மாநில பறவையாக சிட்டுக்குருவியை தான் வைத்திருக்க வேண்டும். ஆகையால் அழிந்து வரும் இந்த குருவியை காக்க ஒவ்வொருவர் வீட்டிலும் கூட்டினை தயார் செய்ய வேண்டும். சிட்டுக்குருவி கூட்டை இலவசமாக தர நான் எப்போதும் ரெடியாக இருக்கிறேன். கொஞ்சம் தண்ணீர் மற்றும் திணையை அவற்றுடன் சேர்த்து வையுங்கள், இவ்வுலகம் சிட்டுக்குருவிகளுக்குமானது"!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.