காரைக்குடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஸ்ரீராம். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததால் நண்பர்கள் மூலமாக அறிமுகமான சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அசார் என்பவரிடம் வெளிநாடுகளிலிருந்து கடத்தல் வேலை செய்யும் குருவியாக செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி கடத்தல் கும்பலுக்காக மஸ்கட்டில் இருந்து 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் இறங்கி சென்னைக்கு விமானம் மூலமாக செல்ல முற்பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அங்கே இருந்த குப்பை தொட்டி ஒன்றில் தங்கத்தை போட்டுள்ளார். பின்னர் அதிகாரிகளுக்கு பயந்து விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவரது வருகைக்காக காத்திருந்த அசாரிடம், தங்கத்தை குப்பை தொட்டியில் போட்டு விட்டதாக தெரிவித்ததால் அசார் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் ஸ்ரீராமை அழைத்து கொண்டு மீண்டும் விமானம் மூலமாக கொழும்பு சென்று விட்டு அங்கிருந்து விமானம் மூலமாக மும்பை விமான நிலையம் சென்றுள்ளனர்.
அங்கு குப்பை தொட்டியை பார்த்தபோது அதில் தங்கம் இல்லை எனத் தெரியவந்ததால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார் அசார். இதற்கு பிறகு சென்னையில் பிராட்வே பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து ஸ்ரீராமை அசார் மற்றும் அவரது ஆட்கள் சித்தரவதை செய்துள்ளனர்.
நீண்ட நாட்களாக ஸ்ரீராமின் மொபைல் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதால், கவலையடைந்த அவரது குடும்பத்தினர், ஸ்ரீராமின் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு, அசாருதீன் என்ற தனது நண்பருக்கு போன் செய்து தான் சிக்கலில் இருப்பதை தெரிவித்தார். இதையடுத்து, இவரின் புகைப்படத்தையும், இவரை சிலர் கடத்தி வைத்துள்ளதாகவும் வாட்ஸாப் குழுக்களில் பகிர்ந்தார் அசாருதீன். இந்த தகவல் சென்னை பூக்கடை துணை ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக அசாருதீனை தொடர்பு கொண்டு பேசி முழுவிவரத்தையும் பெற்றுகொண்ட காவல்துறை, ஸ்ரீராமை தேட ஆரம்பித்தனர். அவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், ஸ்ரீராம் பாரிமுனை அம்பர்சன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிக்க : ஆவிகளுடன் பேசவைப்பதாக சொன்னார்... சென்னையில் மாந்த்ரீகத்தை நம்பி ரூ.7 கோடியை இழந்த மென்பொறியாளர்
இதையடுத்து சினிமா பாணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விடுதியை சுற்றி வளைத்தனர். மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு உடலில் சிகரெட்களால் சூடுவைத்த காயங்களோடு இருந்த ஸ்ரீராமை காவல்துறை மீட்டனர்.
மேலும் லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மொஹம்மது ஹர்சத், திருவள்ளூரைச் சேர்ந்த நவீன், ஜெயராஜ் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். முகமது ஹர்சத், கடத்தல் தலைவன் அசாரின் மகன் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல் தலைவன் அசாரை போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Gold