முகப்பு /செய்தி /சென்னை / விடுதலை படத்துக்கு குழந்தையுடன் சென்ற இளம்பெண் வளர்மதி... திரையரங்கில் வாக்குவாதம் செய்ததால் காவல்துறை வழக்குப் பதிவு

விடுதலை படத்துக்கு குழந்தையுடன் சென்ற இளம்பெண் வளர்மதி... திரையரங்கில் வாக்குவாதம் செய்ததால் காவல்துறை வழக்குப் பதிவு

வளர்மதி

வளர்மதி

ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட விடுதலை படத்திற்கு குழந்தையுடன் சென்றதால் இளம்பெண் வளர்மதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் வளர்மதி. சேலம் பகுதியைச் சேர்ந்த இவர் தற்போது எம்ஜிஆர் நகர் அன்னை சத்யா தெரு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படம் நேற்று முன் தினம் வெளியானது.

இப்படத்தை பார்ப்பதற்கு நேற்று மாலை காட்சிக்கு வளர்மதி, ஒன்பது வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு முதியவர்களோடு விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மெட்ரோ மாலில் நேஷனல் ஐனாக்ஸ் என்ற திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் பரிசோதகர் பெண் குழந்தைக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து வளர்மதி, நான் குழந்தையுடன் தான் படம் பார்க்க செல்வேன் என்று கூறி டிக்கெட் பரிசோதகரிடம் பிரச்சனையில் ஈடுபட்டு திரையரங்கத்திற்குள் சென்றுள்ளார்.

இதனால் திரையரங்கின் மேலாளர் விக்னேஷ் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார் திரையரங்கிற்குள் சென்று வளர்மதியிடம் சொல்லி பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த வளர்மதி, ‘தான் ஏன் திரையரங்கை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் படம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் வளர்மதி. இந்தச் சம்பவம் தொடர்பாக திரையரங்கு மேலாளர் விக்னேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வளர்மதி மீது அத்துமீறி பிரச்சனையில் ஈடுபடுதல், பொது இடத்தில் பிரச்சனையில் ஈடுபடுதல், திரைப்படச் சட்டம் 1952 உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

First published: