சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி. அவருக்கு வயது 51. இவர் மென்பொருள் துறையில் தலைமை அதிகாரியாக நைஜீரியா, துபாய், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலத்தில் நைஜீரியாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கவுதம் சிவசாமி மேனேஜிங் டைரட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் அக்கவுண்ட் மேனேஜராக வந்த கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி முத்து கணபதி என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.
அண்டை மாநிலம் என்பதால் இருவரும் பழகி, பின் இருவரும் நண்பர்களாக மாறி உள்ளனர். அவ்வபோது இருவரும் ஒன்றாக இந்தியா வரும் போது, இருவரும் குடும்ப நண்பர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணி தனக்கு கடவுள் அருள் உள்ளதாகவும் கெட்ட ஆவிகளை பில்லி சூனியம் வைத்து எடுக்க தெரியும் என கவுதம் சிவசாமியை நம்ப வைத்துள்ளார். மேலும், கேரளாவில் மாந்திரிகம் செய்வதற்காக தனது வீட்டையே மாந்திரீக வீடாக சுப்பிரமணி மாற்றி வைத்துள்ளார்.
கையில் இருந்து எலுமிச்சம்பழம் எடுப்பது, சாமி படத்தில் இருந்து திருநீறு வரவழைப்பது, திடீரென வெளிச்சம் வர வைப்பது, மெஸ்மரிசம் செய்வது போன்ற செயல்களாலும், புட்டபர்த்தி சாய்பாபா தன்னிடம் நேரடியாக பேசுவதாகவும் சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால், சுப்பிரமணியை கடவுள் அருள் பெற்றவர் என நினைத்து கவுதம் சிவசாமியும், சுப்ரமணி சொல்வது போல செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கௌதம் சிவசாமியின் தாய், தந்தை, அண்ணன், மகள் ஆகியோர் இறந்த நிலையில் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளின் பிடியில் உள்ளதாக கூறி கௌதம் சிவசாமியை தனது கட்டுப்பாட்டுக்குள் சுப்பிரமணி கொண்டு வந்துள்ளார்.
மேலும் இறந்து போன கௌதம் சிவசாமியின் தாய், தந்தை, அண்ணன், மகள் ஆகியோருடன் நேரடியாக பேச வைப்பதாக கூறி அதற்கு மாந்திரிகம் மற்றும் பூஜைகள் செய்ய வேண்டும் என 52 தவணைகளாக 2 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் சுப்பிரமணி தனது மனைவிக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கியதும் தனது மகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்திருப்பதும் கெமிக்கல் லேப்களில் கிடைக்கும் கெமிக்கல் பொருட்களைக் கொண்டு மாந்திரீகம், பில்லி, சூனியம் தொடர்பாக மாயாஜால வேலைகளை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏமாற்றப்பட்ட கௌதம் சிவசாமி பேசுகையில், தன்னுடைய அம்மா மற்றும் இறந்த மற்ற உறவினர்கள் குறித்து பல விஷயங்களை தன்னிடம் கூறியதாகவும், குறிப்பாக அவர்களோடு தான் பேசி வருவதாகவும் தொடர்ந்து கூறிவந்ததால் சுப்பிரமணியை நம்பியதாக தெரிவித்தார்.
தன் அம்மா பேசுவது தனக்கு கேட்கவில்லை என சொல்லும்போது பாவம் செய்தவர்களுக்கு அம்மா பேசுவது கேட்காது. மனதில் சுத்த எண்ணம் இல்லாததால் கேட்கவில்லை என கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சுப்பிரமணி மாந்திரீக செயல்களால் தன்னை கட்டிப்போட்டுவிட்டதாகவும், ஆதாரங்களோடு ரூபாய் 2 கோடிக்கு மேல் தன்னை ஏமாற்றியதாகவும் ஆனால் ஆதாரமே இல்லாமல் கையில் நேரிடடியாக வாங்கிய தொகை 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் மொத்தமாக தன்னிடமிருந்து மாந்திரீகம், கடவுள் எனச் சொல்லி சுமார் 7 கோடி வரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தன்னைப் போன்று யாரும் மாந்திரீகம், பில்லி, சூனியம் என்ற பெயரில் மோசடிக்காரர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கிய விவகாரம்- 24 காவலர்கள் பணியிட மாற்றம்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Kerala