சென்னை பெருநகரத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் ஆகிய குற்றங்களோடு, இப்போது சைபர் க்ரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
கடன் வேண்டுமா, லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது, அதிகமான சம்பளத்தில் வேலை வேண்டுமா, நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா எனக் கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் நமக்கு ஒவ்வொரு நாளும் வரும். இவை தான் நமக்கான வலை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இது போன்ற அழைப்புகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற இணைய வழி குற்றங்கள் இப்போது சென்னையில் அதிகரித்துள்ளன என எச்சரிக்கை செய்திருக்கிறது சென்னை நகர குற்றப் பிரிவு காவல்துறை. அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை இப்போது பார்க்கலாம்.
2023-ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சென்னையில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த நான்கு மாதங்களில் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மட்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டு 264 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் 86 வழக்குகள் சைபர் க்ரைம் தொடர்பான வழக்குகள். அதோடு 2,732 புகார்கள் விசாரணையில் உள்ளன. நிதி மோசடி தொடர்பாக 63 வழக்குகளும், நிதி சாராத மோசடியாக 23 வழக்குகளும், ஆவண மோசடி தொடர்பாக 71 வழக்குகளும், வேலை வாய்ப்பு மோசடியாக 9 வழக்குகளும், வங்கி மோசடியாக 10 வழக்குகளும், சிட் பண்ட் மற்றும் கந்து வட்டி தொடர்பாக 35 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
Also Read : சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்!
மேலும், நில மோசடி தொடர்பாக 22 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு விபச்சாரம், போதைப் பொருள் விற்பனை, கள்ளச் சந்தையில் மது வியாபாரம் மற்றும் சூதாட்டம் என Anti Squad Wing பிரிவில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இணையவழி குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. எனவே பேராசைப் படாமல், மோசடிப் பேர்வழிகளிடம் இருந்தும், அவர்கள் விரிக்கும் வலையில் இருந்தும் பொதுமக்கள் மிக கவனமாக இருப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Cyber crime