சென்னை திருவொற்றியூர் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசை சுமந்து வந்தனர்.
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் காவல் தெய்வமாக உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் சிறிய அளவில் இருந்தது. இந்த கோவிலை விரிவாக்கம் செய்து புணரமைக்கும் திருப்பணியானது கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்ற திருப்பணியில் ஸ்ரீ படவேட்டம்மன், முருகன், விநாயகர் சன்னிதிகள் மிகவும் பிரமாண்டமாக நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டன. திருப்பணி முடிவடைந்ததை ஒட்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 19ஆம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ஐந்து யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முதல் நிகழ்வாக பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசத்தில் வைக்கப்பட்டு கோ பூஜை, கலச பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடாகின. அதைத் தொடர்ந்து சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் படவேட்டம்மன், விநாயகர் முருகன், ராஜகோபுரம், பஞ்ச கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து அங்கே கூடியிருந்த பக்தர்களுக்கு புனித நீர் தெளித்தனர்.
கும்பாபிஷேக விழாவில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து படவேட்டமனுக்கு மரியாதை செய்தது பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: அசோக்குமார், திருவொற்றியூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvotriyur