காலநிலை மாற்றத்தால் சென்னையில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள பசுமை மற்றும் நீர் உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சென்னைக்காக இதுவரை 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976ம் ஆண்டு அமலானது. 2வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் இருக்கும். இந்நிலையில் 2027- 46 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயார் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், பசுமை பரப்பு மற்றும் நீர் வழித்தடங்களை ஒருங்கிணைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக பசுமை பரப்பு, நீர் நிலைகளை நகரம் இழந்துள்ள நிலையில், இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார் எர்த் கேர் அமைப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ .
பசுமை உட்கட்டமைப்புகள் என்று அழைக்கப்படும் பூங்காக்கள், மரங்கள் ஆகியவற்றையும், நீர் உட்கட்டமைப்பு என்று அழைக்கப்படும் மழைநீர் வடிகால் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதன்படி ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், சதுப்பு நிலங்கள், மரங்கள், பசுமை இடங்கள், பூங்காக்கள், காடுகள் ஆகிவற்றை ஒருங்கிணைத்து பசுமையான சூழலை உருவாக்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
2005ம் ஆண்டு சென்னை பெருநகரத்தின் பசுமை பரப்பு 167.46 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில், 2012ல் 153.03 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது. விரிவுபடுத்தப்பட்ட சென்னை பகுதிகளிலும் இதுகுறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சதானந்த்.
சென்னை பெருநகரில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்தல், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை பரிந்துரை செய்தல் உள்ளிட்டவை இந்தத் திட்ட அறிக்கை தயார் செய்யும்போது ஆய்வு செய்யப்படவுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai