சென்னை மெரினா கடற்கரையில் குறிப்பாக பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிராக உள்ள பகுதியில் நேற்று முன் தினம் பொதுமக்கள் அதிகம் வந்த வண்ணம் இருந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்குள் வந்துள்ளனர். காதல் ஜோடியின் இருசக்கர வாகனத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் இடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துடன், அவர்களைத் தாக்கி செல்போனையும் பறித்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் கலா செல்போன் பறித்துக் கொண்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனியாக தடுத்து நிறுத்த முயன்றுள்ளார் .
காவலர் கலா விசாரிக்க முயன்றபோது , இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்க வந்த காவலர் கலாவையும் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. தனியாக நின்று போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற காவலர் கலா அருகில் இருக்கும் அண்ணா சதுக்கம் காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளார்.
அதற்குள் இருசக்கர வாகனத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் காவலர் கலாவிடம் சிக்காமல் தப்பித்து சென்றுள்ளனர். போதை ஆசாமிகளின் இருசக்கர வாகன நம்பரை பார்த்து வைத்திருந்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.
காவலர் கலா மற்றும் காதல் ஜோடி கூறியதை அடிப்படையாக வைத்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும் விசாரணை மேற்கொண்டதில் போதையில் தகராறில் ஈடுபட்டு செல்போனை பறித்துச் சென்றவர்கள் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான வால் டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், தமிழரசன் வசந்தகுமார், சோமசுந்தரம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
குறிப்பாக உதயகுமார் பி கேட்டகிரி ரவுடி என்பதும், அவர் மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று தமிழரசன் மீது ஏழு வழக்குகளும் வசந்தகுமார் என்பவர் மீது ஐந்து வழக்குகளும் விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
போதையில் இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் தாறுமாறாக ஓட்டி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதை உதயகுமார் வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகள் காதல் ஜோடியை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும்போது, மாலை வேலையில் நூற்றுக்கணக்கானோர் சுற்றியிருந்தனர். அப்போது ரவுடிகளை தனியாக எதிர்த்து போராடிய காவலர் கலாவிற்கு யாரும் உதவ முன்வராவிட்டாலும் தைரியமாக நின்று தவறு செய்தவர்களை தட்டிக் கேட்டு கடமையை செய்த காவலர் கலாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News