முகப்பு /செய்தி /சென்னை / செல்போன் திருடி விற்று பெண்களுடன் உல்லாசம்... ஏழு மாதங்களில் 200 செல்போன்கள் திருட்டு... பிரபல செல்போன் திருடன் கைது..!

செல்போன் திருடி விற்று பெண்களுடன் உல்லாசம்... ஏழு மாதங்களில் 200 செல்போன்கள் திருட்டு... பிரபல செல்போன் திருடன் கைது..!

கைது செய்யப்பட்ட பல்சர் பாபு

கைது செய்யப்பட்ட பல்சர் பாபு

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய பிரபல செல்போன் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

ஒரு வாரத்திற்கு முன்பாக அடையாறு காந்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கால்களும் உடைந்த மாற்றுத்திறனாளி நபர்,  இளைஞர் ஒருவரிடம் அவசரமாக போன் பேச வேண்டும் எனவும் தனது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது எனவும் கூறி, செல்போனை வாங்கியுள்ளார். இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்த அந்த நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனுடன் தப்பிச் சென்றார்.

இது குறித்து, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அன்று இரவே இதே போல இருசக்கர வாகனத்தில் கால்கள் உடைந்த மாற்றுத்திறனாளி நபர் தனது செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாக இந்திரா நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல  ஒரே இரவில் நான்கு இளைஞர்களால் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நான்கு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருடியது  தண்டையார்பேட்டை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல செல்போன் திருடன் பல்சர் பாபு(33) என்பது தெரியவந்தது. பல்சர் பாபு கடந்த 2010 ஆம் ஆண்டு பறக்கும் ரயிலில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, ரயிலில் இருந்து கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் ஓரளவு மட்டுமே பாபுவால் நடக்க முடிந்ததுள்ளது.

இரண்டு கால்களும் உடைந்து சரிவர நடக்க முடியாமல் இருக்கும் பல்சர் பாபு, பல்சர் இருசக்கர வாகனத்தை மட்டுமே ஓட்டுவதால் அவனுக்கு இந்த பெயர் வந்துள்ளது. மேலும் பாண்டிச்சேரியில் இரவு நேரங்களில் நடக்கும் சிக்னல் ரேசில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பதும், இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபடுவதால் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பல்சர் பாபுவை பிடிப்பதற்கு அடையாறு உதவி ஆணையர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் தலைமறைவாக இருந்த பல்சர் பாபுவை அடையாறு உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பல்சர் பாபுவிடம் மேற்கொண்ட விசாரணையில், 4 முறை பாபு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதும், மேலும் சென்னையில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் புறநகர் காவல் நிலையங்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

வழிப்பறி செய்த செல்போன்களை பர்மா பஜாரில் உள்ள ஆனந்த் என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதி அடுத்த சத்தியமேடு பகுதியில் லாட்ஜ் எடுத்து மது, பெண்கள் என உல்லாசமாக இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Also Read : கும்பாபிஷேகத்தில் சீர்வரிசை சுமந்து வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

மேலும், பல்சர் பாபு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சிறையில் இருந்து வெளியே வந்ததுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கடந்த ஏழு மாதங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட செல்போன் வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து பல்சர் பாபுவிடமிருந்து செல்போன்களை வாங்கிய பர்மா பஜாரை சேர்ந்த ஆனந்த் என்பவரையும் அடையாறு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 40 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற செல்போன்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல் குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News, Smartphone, Theft