கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட அஸ்வினி என்ற பெண், அரசு வழங்கும் அன்னதானத்தை சாப்பிட வரும் தங்களை ஏன் விரட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதே கோயிலில் அஸ்வினியுடன் அன்னதானம் சாப்பிட்டார். இதேப்போல் சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிகள் ஆர்.பிரியா. எஸ்.எஸ்.தர்சினி, கே.திவ்யா ஆகியோர் சாதி ரீதியாக தங்களை பிறர் எப்படி ஒதுக்கி வைக்கிறார்கள என யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவிகளை தலைமைசெயலகத்திற்கு நேரடியாக அழைத்து பேசினார். அப்போது அவர்களின் அழைப்பை ஏற்று, அவர்களின் இல்லத்திற்கு சென்றார்.
இதையும் படிக்க : கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் : முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்!
இப்படி அவ்வப்போது சர்ச்சை எழுந்து வந்த நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல' திரைப்படத்தை காண டிக்கெட் எடுத்துக்கொண்டு 6 சிறுவர்களுடன் சென்ற 10 பேரை மட்டும், திரையரங்க ஊழியர்கள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரோகிணி திரையரங்கம் சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் U/A சான்று பெற்ற 'பத்து தல' படத்திற்கு சிறுவர்களை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, U/A சான்று பெற்ற படத்திற்கு 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் சிறுவர்களை தங்களது திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனவும், நரிக்குறவர்கள் என்பதற்காக அவர்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு 'பத்து தல' படத்தை உற்சாகமாக பார்த்த வீடியோவையும் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டது.
ஆனால் ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த தங்களை அனுமதிக்காதது இது முதல் முறையல்ல என்று நரிக்குறவ பெண்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்களை பார்க்க வந்த போதும் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், ரோஹிணி திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குற்றச்சாட்டு குறித்து இதுவரை எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும், சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகத்திடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என தெரிவித்துள்ளார். ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவ சகோதரியும் சகோதரர்களும் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது என குறிபிட்டுள்ளார். எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பிறகு இந்த உலகம் அனைவருக்குமானது என்று நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரோகிணி திரையரங்கு ஊழியர் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வட்டாட்சியர் நேரில் சென்று ரோகிணி திரையரங்கில் விசாரணை நடத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SC / ST Act, Scheduled caste, Theatre