விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேராசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு அளித்து, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்குப் பிறகு, சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். அதில், 90,000 பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருந்தனர்.
இவர்களில் 16,000 பேர் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகவும், கூடுதல் மதிப்பெண் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக, இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சில பேராசிரியர்கள் லஞ்சம் பெற்றது அம்பலமானது.
அந்த வகையில், செமஸ்டருக்கு 40 கோடி முதல் 45 கோடி ரூபாய் வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் எனப்படும் ஆட்சிமன்ற குழு கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லலிதா உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Also Read : கொரோனா பரவல்... வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராக அறிவுறுத்தல்
அதில், தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு பதவிக் குறைப்பு செய்யப்பட்டது. மற்றொருவருக்குப் பண பலன்களை சில ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடிவுசெய்யப்பட்டது. இதன்மூலம் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 11 பேர் மீது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University