முகப்பு /செய்தி /சென்னை / ’கலாஷேத்ரா முன்னாள் மாணவி நான்..’ பாலியல் தொல்லை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பிக்பாஸ் அபிராமி.. கொதித்தெழுந்த சின்மயி!

’கலாஷேத்ரா முன்னாள் மாணவி நான்..’ பாலியல் தொல்லை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பிக்பாஸ் அபிராமி.. கொதித்தெழுந்த சின்மயி!

அபிராமி

அபிராமி

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நடிகை அபிராமி பேசியுள்ள வீடியோ ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம் பாலியல் தொல்லை தொடர்பாக எத்தனை மாணவிகள் புகார் அளித்துள்ளனர், புகாரின் மீது கல்லூரி விசாரணை குழு சார்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறியப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் ரேவதி பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பான ஆவணங்களை மாநில மகளிர் ஆணையத்தில் சமர்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 30-ம் தேதி ஹைதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், சென்னை திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் அபிராமி பேசியுள்ள வீடியோ ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

Read More : கலாஷேத்ரா பாலியல் புகார் : கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

அவர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன். நானும் கலாஷேத்திரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். எனக்கு இந்த விவகாரத்தில் பேச விருப்பமில்லை. ஏனென்றால் எப்போதுமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே பார்க்கக் கூடாது. நிறைய பேர் அதை மட்டுமே பார்த்து கருத்து சொல்கிறார்கள். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை.

ஆனால் இப்போது யார் யாரோ கலாஷேத்திரா எப்படி இருக்கும் என என்னிடம் கேட்கிறார்கள். கலாஷேத்திரா என்ற பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், கல்லூரியை பற்றி தவறாக சொல்கிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. நான் ஒரு முன்னாள் மாணவியாக சொல்கிறேன். கலாஷேத்திரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது.என்ன நடக்கிறது என்று எங்களுக்கே ஒன்னும் புரியவில்லை. ஒரு பக்கத்தின் பார்வையை மட்டுமே வைத்து இவர்கள் இப்படித்தான் என்ற முடிவுக்கு எப்படித்தான் உறுதியாக வருகிறார்கள் என்று புரியவில்லை.

நான் கல்லூரியின் இயக்குநர் ரேவதி மேடம் பக்கம்தான் நிற்பேன். அவர்கள் சமீபத்தில் தான் இயக்குநராக பொறுப்பேற்றவர். இந்த பிரச்சனை 10 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது என எல்லாரும் சொல்கிறார்கள். அப்போது ரேவதி இயக்குநர் கிடையாது. இப்போது எல்லா பிரச்சனைக்கும் ரேவதியை குற்றம் சாட்டுகிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று நிறைய கேள்விகள் இருக்கிறது.

அந்த ஆசிரியருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்பதை அறிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும். சொல்லப் போனால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கு. மனைவி மற்றும் ஒரு பொண்ணும் இருக்கு. அவங்க பற்றி யாருமே நினைக்கவில்லை. நிறைய இடத்தில் நாங்க பெருமையாக பார்த்த ஆசிரியர்களை ரொம்ப இழிவுபடுத்தி பேசியிருக்காங்க. பல நல்ல விஷயங்களுக்கு சென்றுகொண்டிருந்த கல்லூரி இது. எந்த துன்புறுத்தலாக இருந்தாலும் நடந்த நேரத்திலேயே வெளிப்படையாகப் பேச வேண்டும். என்று கூறியுள்ளார்.

நடிகை அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக பேசுவதாக பல நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் உண்மைதான். உண்மை பொய்யாகி விடாது என்று பதிவிட்டு இருக்கிறார். அதே போல தனக்கு நேர்ந்தபாலியல் தொல்லையை போன்று பிரபல ஹாலிவுட் பாடகி லேடி காகாவிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்த செய்தியையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சின்மயி.

top videos

    'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் அபிராமி. அந்த படத்தில் அஜித் பேசிய 'நோ என்றால் நோ' என்ற பெண்களுக்கு ஆதரவான வசனம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Chennai