சென்னையில் உள்ள பட்டாளம் பகுதி ஹாஜி முஹம்மது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. உத்தர பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது குடும்பத்தோடு சென்னையில் தங்கி மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வருகிறார். இவரது 7 வயது மகன் தேஜா குப்தா என்பவர் வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தேஜா குப்தாவுக்கு இரண்டு மாத காலம் கோடை விடுமுறை என்பதால் நீச்சல் பயிற்சியில் தன்னை சேர்த்து விடுமாறு தனது தந்தை ராகேஷ் குப்தாவிடம் கூறியுள்ளார். இதனால் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ராகேஷ் குப்தா, வேப்பேரியில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காவான My lady Park நீச்சல் குளத்தில் தனது மகனை நீச்சல் பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.
நீச்சல் குளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுவன்..நடந்தது என்ன?
இந்த நீச்சல் குளமானது முல்லை மலர் ட்ரஸ்ட் மூலமாக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, தற்போது முனியாண்டி என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் சுமார் 15 சிறுவர்கள் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 13 நாட்களாக நீச்சல் பயிற்சிக்குச் சிறுவன் தேஜா குப்தாவை அவரது தந்தை அழைத்து வந்து பின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார். நேற்று மாலை சிறுவனை, தாத்தா சசிலேந்திர குமார் நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்பாக சிறுவனின் தந்தை ராகேஷ் குப்தாவும் நீச்சல் குளத்திற்கு வந்துள்ளார்.
நீச்சல் குளத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் சிறுவனைப் பயிற்சியாளர்களோடு அனுப்பி வைத்துவிட்டு அவரது தாத்தா மற்றும் தந்தை இருவரும் நீச்சல் குளத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். பயிற்சி நிறைவு பெற்ற பின், பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் அனைத்து சிறுவர்களையும் அழைத்து வந்துள்ளனர். ஆனால், பயிற்சியாளர்களோடு சிறுவன் வராததால் சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா பயிற்சியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பயிற்சியாளர்கள், சிறுவன் கழிவறை சென்றிருப்பதாகவும் அங்கு சென்று சிறுவனை அழைத்துக் கொள்ளுமாறும் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுவன் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக நீச்சல் குளத்திற்குச் சென்று பார்த்த போது, சிறுவன் நீருக்கடியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா கூச்சலிட்டுக்கொண்டே சிறுவனை நீச்சல் குளத்திலிருந்து மேலே தூக்கி வந்தனர். மயக்க நிலையில் இருந்த சிறுவனை உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Also Read : நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி.. சென்னையில் அதிர்ச்சி
பயிற்சியாளர்கள் மீது 304-A வழக்கு பதிவு :
இதனையடுத்து பெரிய மேடு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில் மற்றும் சுமன் ஆகிய இருவரும் அஜாக்கிரதையாக செயல்பட்ட காரணத்தினால் மட்டுமே சிறுவன் நீச்சல் குளத்தில் உள்ளே விழுந்தது தெரியவந்தது. இதனால், நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில் மற்றும் சுமன் ஆகிய இருவர் மீதும் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் விளைவித்தல் (304-A) என்ற பிரிவின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் தந்தை ராகேஷ் குப்தா, தனது மகனின் மரணத்திற்கு நீச்சல் பயிற்சியாளர்கள் இருவரும் மட்டுமே காரணம் எனவும், அனைத்து குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய நீச்சல் பயிற்சியாளர்கள் தனது குழந்தை நீச்சல் குளத்திற்கு உள்ளேயே விழுந்ததைக் கவனிக்காமல் தங்களிடம் மெத்தனப் போக்காகப் பதில் சொல்லியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நீச்சல் குளத்தில் லைஃப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லையெனவும், நீச்சல் குளம் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.