சமூக வலைதளங்களில், உணவுகளை ரிவ்யூ செய்யும் யூடியூப் சேனல்கள் பல இருந்தாலும், சில youtube சேனல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில், யூடியூபில் இஃப்ரான் வியூஸ் என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்பவர் youtube சேனல் நடத்தி வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் மிகப் பிரபலமான இந்த யூடியூப் சேனலுக்கு, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது மனைவியுடனும் வெளியே செல்லும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் இர்பான்.
இந்த நிலையில் தென் மாவட்டத்திலிருந்து நேற்றைக்கு முந்தைய நாள் இரவு முகமது இர்பான் தனது பென்ஸ் காரில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் மீது பென்ஸ் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இர்ஃபானின் பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி காட்டாங்குளத்தூர், முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பத்மாவதி என தெரியவந்தது. இவர் சென்னை பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வாகனத்தை இர்பானின் ஓட்டுனர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.