செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளதிருப்போரூர் கந்தசாமி கோவிலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கின்றனர். முருகன் வழிபாட்டிற்கு சிறந்த தலமாக போற்றப்படுகிறது. திருப்போரூர் என்பதை புனித போர் (கடவுள் நிகழ்த்திய போர்) நடந்த இடம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருப்போரூரில் முருகப் பெருமான் அசுரர்களை எரித்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கருமத்தை (செயல்களை) நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார்.
அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒதுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும். முருகப்பெருமான் போரிட்டபோது மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர் புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும் பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார் என்று சொல்லப்டுகிறது. இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள் முருகப்பெருமானின் கண்களில் அகப்பட்ட இடம் கண்ணகப்பட்டு (கண்ணகப்பட்டு என்ற இடமாக திருப்போரூர் அருகே உள்ளது) என்றும் சொல்லப்படுகிறது.
சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயில் ஒன்று தோகை விரித்து ஆடுவதை கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி சிதம்பரா, மதுரைக்கு வடக்கே காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டுக்குள் புதையுண்டு கிடைக்கிறது. அதனை கண்டெடுத்து அழகிய திருக்கோவில் நிர்மாணித்து, பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வா. அந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும் என்று கூறிவிட்டு மறைந்தாராம்.
அவ்வாறே, மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து யுத்தபுரி, சமராபுரி, போரின் நகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக முருக பெருமான் காட்சியளிப்பதை கண்டு மகிழ்ந்தார். அந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது நவாப் மனைவிக்கு திருநீறு பூச அவரது வயிற்று வலி நீங்கியது.
மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோயில் உருவானது அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் ஆகும். சிதம்பர சுவாமி இங்கு வந்து முருகன் சிலையை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார் காட்டை சீர்திருத்தி புதிய கோவிலை எழுப்பினார் கந்தசாமியை போற்றி 726 பாடல்கள் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News, Murugan temple