செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை மர்மநபர்கள் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான சர்புதீன். இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா, பாருக் ஆகியோருடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இந்நிலையில் சர்புதீனுக்கும் அகமது பாஷா, பாரூக் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் சர்புதீனை பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதி மற்றும் மசூதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வலியுறுத்தி சர்புதீன் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனு அளித்தார்.
இதன் பெயரில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் வாசிக்க: பிபிஜி சங்கர் கொலை விவகாரம்: கொலையாளிகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சகோதரர் மனைவி
இதனால், சர்புதீனுக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது . இதுதொடர்பாக கடந்த 24ஆம் தேதி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் சர்புதின் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை மீண்டும் சலீம் பாஷா என்பவர் செல்போன் மூலமாக நாளை உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் குறித்து சர்புதீன் மற்றும் அவரது வழக்கறிஞர் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பின் சென்னை செல்வதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்த மங்களம் பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சர்புதீன் காரில் ஏறும்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கும்பல் காரை சுற்றி வளைத்தது.
காரின் கண்ணாடியை உடைத்த கும்பல் கார் கதவை திறந்து சத்புதீனை சரமாரியாக வெட்டித் தாக்கியது. இதில் சர்புதீன் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையும் வாசிக்க: மீனவர் கொலை வழக்கு - 10 பேருக்கு ஆயுள் தண்டனை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம், மன்சூர் அலி, சலிம்பாஷா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News