மரபு சார்ந்த பயிர் நடவு விவசாயம் கை கொடுக்காத நிலையில் பண்ணை முறை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறுவது இயல்பானதுதான். நெல், வாழை, கடலை என சுழற்சி முறையில் பயிர் செய்கின்றபோது நல்ல வருமானம் கிடைக்காத நிலையில் தென்னை, மா, தேக்கு போன்ற பண்ணை விவசாயத்தில் விவசாயிகள் இறங்கி விடுகின்றனர்.
அந்த வகையில் மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு போன்றவையும் விவசாயிகளின் பண்ணை முறை வேளாண்மை பணிகளில் முன்னுரிமை பெற்று வருகிறது. பண்ணை குட்டைகளை அமைத்து இறால் குஞ்சுகளை வாங்கி வளர்த்து விட்டால், அதன் பிறகு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றன.
இறால்களில் எண்ணற்ற சத்து இருப்பதால் மக்களிடையே அதற்கான தேவையும், வரவேற்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நம் உடலில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கக் கூடிய செலீனியம் இறால்களில் உள்ளது. இதய நலனுக்கு தேவையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இறால்களில் மிகுதியாக உள்ளது. அத்துடன் உயர் ரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்துகிறது.
நமது சருமத்திற்கு பலன் தரக்கூடிய விட்டமின் இ, நினைவுத் திறனை மேம்படுத்தும் விட்டமின் பி-12 போன்றவை இறால்களில் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கான புரதச்சத்து தேவையை இது பூர்த்தி செய்கிறது. எனினும், ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் இறால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இறால் வளர்ப்பை தேர்வு செய்யும் மேற்கு வங்க விவசாயிகள்
மேற்கு வங்க மாநிலத்தில் நந்தகுமார், நந்திகிராமம், காந்தி, சந்திப்பூர், ராம்நகர், கஜௌரி போன்ற இடங்களில் இறால் வளர்ப்பு பிரதான தொழிலாக மாறி வருகிறது. குறிப்பாக நந்திகிராம் பகுதியில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வந்தது. இந்த நிலையில், நெல் சாகுபடியைக் காட்டிலும் இறால் வளர்ப்பில் கூடுதல் லாபம் கிடைப்பதால் கடந்த சில ஆண்டுகளில் அங்கு நெல் சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது.
நந்திகிராம் வட்டம் ஒன்றில், ஏறக்குறைய 11 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இறால் சாகுபடி நடைபெற்று வருகிறது என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அங்குள்ள விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான விவசாய நிலங்கள் ஒருபோக சாகுபடி முறையை கொண்டவை. தோராயமாக 30 செண்ட் நிலத்தில் நெல் சாகுபடி மூலமாக ஆண்டுக்கு ரூ.3,500 என்ற அளவில் லாபம் கிடைத்து வந்ததாக கணக்கிட்டால், தற்போது அதே அளவு நிலத்தில் இறால் வளர்ப்பு மூலமாக ரூ.25 ஆயிரம் வரை கிடைக்கிறதாம். அதாவது, 8 மடங்கு அதிக லாபம் கிடைக்கிறதாம்.
இறால் வளர்ப்பு மூலமாக நந்திகிராம் பகுதியை சேர்ந்த 10 ஆயிரம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதனால், இறால் வளர்ப்பை அரசே ஊக்குவித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Business, Farmers, Money18