இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. பொதுவாக ஆதார் அட்டையை திருத்தம் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்தவேண்டும்.
இந்நிலையில், யுஐடிஏஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆதார் விவரங்களை ஜூன் 14ஆம் தேதி வரை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த சலுகையானது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை புதுப்பிக்க மட்டுமே வழங்கப்படும்.
இது தவிர, புகைப்படம், கருவிழி அல்லது பிற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று புதுப்பித்தலுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டியது அவசியம்.
ஆதார் விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
ஆதார் ஆணையம் (UIDAI), இந்திய குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆதார் ஆணையம் வெளியிட்ட தகவல்படி, சிறுவர் சிறுமிகள் 15 வயதை பூர்த்தி செய்திருந்தால், பெற்றோர்கள் அவர்களின் தகவல்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட ஆவணங்களின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான சேவைகள் உடனடியாக கிடைக்க இது உதவும் என அரசு தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை, அதாவது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாக புதுப்பிக்க விரும்பினால், அதற்கான வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.
1. முதலில், UIDAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in -க்குச் செல்லவும்.
2. இப்போது, "My Aadhaar" ஆப்ஷனைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "Update Your Aadhaar" என்பதைத் கிளிக் செய்யவும்.
Also Read | OTP கேட்பதெல்லாம் பழைய ஸ்டைல்... மோசடி கும்பலின் புதிய ரூட் இதான்
3. இதையடுத்து, "Update Aadhaar Details (Online)" என்ற புதிய பக்கம் திறக்கப்பட்டும். பின்னர், “Proceed to Update Aadhaar” என்பதைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டு, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
5. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட, OTP ஐ உள்ளிட்டு "உள்நுழை" என்பதைக் கிளிக் செய்யவும்.
6. இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில், நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுத்து புதிய விவரங்களை கவனமாக நிரப்பவும்.
7. தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.
8. பின்பு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றிய பின்னர், "Submit Update Request" என்பதைக் கிளிக் செய்யவும்.
9. நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்ததும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு URN எனப்படும் புதுப்பிப்பு கோரிக்கை எண் குறுந்தகவலாக அனுப்பப்படும். சமர்பித்த படிவத்தின் நிலையைத் தெரிந்துகொள்ள இந்த யுஆர்என் எண் உதவியாக இருக்கும்.
10. கோரிக்கை நிலையைச் சரிபார்க்க, myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று, "Check Enrolment & Update Status" என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது, உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையைப் பார்க்க, உங்கள் URN எண்ணையும், கேப்ட்சாவையும் உள்ளிடவும்.நீங்கள் வழங்கிய விவரங்களை இருமுறை சரிபார்த்து, பதிவேற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card