கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் இயந்திர வடிவமைப்புகள் நமது வாழ்வின் பெரும்பான்மையான வேலைகளை மிகவும் எளிதாக செய்யும்படி மாற்றிவிட்டன. கடினமான வேலைகளை மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் செய்வதற்கு இவை வழி செய்கின்றன. மேலும் தற்போது வரை பல்லாயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் புதிய இயந்திரங்களை வடிவமைக்கவும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் அயராது முயற்சி செய்து வருகின்றனர்.
வெளிநாடுகள் மட்டுமின்றி நம்முடைய நாட்டிலும் மிகச் சிறிய கிராமப் பகுதிகளில் கூட புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தான் நாம் தவறி விடுகிறோம். அந்த வகையில் சோலாபூரை சேர்ந்த ராகுல் புல்கான்புர்கர் என்ற பொறியாளர் ஒருவர் நான்கு சக்கர வாகனங்களுக்கான புதிய இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 2010-ஆம் ஆண்டில் மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் வேலை பார்த்து வந்த ராகுல், நான்கு சக்கர வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுபாட்டை கண்டு அதற்கு ஒரு தீர்வை கண்டறிய வேண்டும் என உறுதி கொண்டு உள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடம் அயராத உழைப்பினாலும் ஆராய்ச்சியினாலும் இதற்கு ஒரு புதிய தீர்வை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளார். அதற்காக புதிய கருவி ஒன்றை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதற்காக ஆராய்ச்சி உரிமத்தையும் அவர் வாங்கியுள்ளார். கடந்த பத்து வருடங்களாக அயராத முயற்சி மூலம் கடைசியாக ராகுலுக்கு தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரமும் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி அவர் கூறுகையில், உலகப் புகழ் பெற்ற இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அவரின் இந்த உரிமத்தை அவரிடம் இருந்து ரூபாய் 13.52 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஆனால் அவரின் இந்த வருமானத்திலிருந்து 30% வருவாயை அவர் வரியாக செலுத்த வேண்டும். இதற்காக ராகுலின் ஆசிரியர் சம்பத் என்பவர் அரசாங்கத்தை அணுகி, ராகுலை ஊக்குவிப்பதற்காக வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ராகுலின் இந்த புதிய ஆராய்ச்சியின் மூலம் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசானது 30% வரை குறையும். மேலும் கார் மற்றும் எஸ்யுவிகளுக்கான மைலேஜ் அதிகரிக்க செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ராகுல் கண்டுபிடித்த இந்த புதிய கருவியானது வாகனங்களின் சைலன்ஸர்களில் பொருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை ஈஜிஆர் எனப்படும் ஒரு தொழில்நுட்பமே கார்களின் மாசுபாட்டை குறைக்க சைலன்சர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராகுல் கண்டறிந்துள்ள இந்த புதிய கருவியானது ஈஜிஆரின் வேலைக்கு உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியானது சென்சார்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வெளிவரும் மாசை 30 சதவீதம் வரை குறைக்கிறது. மேலும் நைட்ரஜன் ஆக்ஸைட்டின் அளவை 70% வரை குறைக்க உதவுகிறது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனமானது வரும் 2024-25 ஆண்டு முதல் தனது கார்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business