முகப்பு /செய்தி /வணிகம் / சூப்பர் வட்டி.. வரி இல்லை.. தபால் நிலையத்தில் உள்ள லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள்!

சூப்பர் வட்டி.. வரி இல்லை.. தபால் நிலையத்தில் உள்ள லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள்!

அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டம்

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொருவரும் தங்கள் வருமான வரியை குறைக்க முயற்சிக்கின்றனர். வரிச் சலுகைகளுக்காக, பல்வேறு முறைகளில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், சரியான புரிதல் இல்லாமல் முதலீடு செய்தால், வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளது. சில வகையான அரசாங்க ஆதரவு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளைப் பெறலாம். முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த வருமானம் உள்ளது. அந்த திட்டங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

இந்திய அஞ்சல் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) இத்தகைய சேமிப்புத் திட்டத்தை வழங்குகிறது. இது 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது. முதலீடு செய்யப்படும் தொகைக்கு மேல் வரம்பு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

இந்திய அஞ்சல் துறை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டம் ஐந்து வருட கால அவகாசத்துடன் வருகிறது. முதிர்ச்சியடைந்த பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்க முடியும். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டு வட்டி விகிதம் 8 சதவீதம் கிடைக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம், மூத்த குடிமக்களும் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறுகிறார்கள்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவள் கணக்கின் உரிமையாளராகிவிடுவாள். ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை அல்லது மூன்று குழந்தைகளுக்காக கூடுதல் கணக்குகளை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 8 சதவீத வட்டி விகிதம் பெறப்படும். இதில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. அதோடு எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கவும் உதவுகிறது.

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (டிடி) என்பது இந்திய தபால் துறை மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இது அனைவருக்கும் பொருந்தக்கூடியது. கிராமப்புறங்களில் இத்திட்டம் படு பிரபலம். அங்கு வங்கி வாய்ப்புகள் குறைவாக உள்ளதும் இதற்கு முக்கியக் காரணம். அதிகபட்ச வரம்பு இல்லாமல் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் 5 வருட டிடியில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிப் பிரிவு 80சி வரிச் சலுகைகள் கிடைக்கும்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஒரு வகையான முதலீட்டுத் திட்டம். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தைச் சேமித்து, அதற்கான வட்டியையும் பெறலாம். PPF-ன் கீழ் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% இருக்கும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Money18, Post Office