உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக விளங்கி வரும் ட்விட்டரில் கடந்த ஓராண்டு காலமாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. காரணம் அதன் உரிமையாளராக இருக்கும் உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் தான் ஒரே ஆளாக வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற பெருந்தொகை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளரானார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO) பராக் அகர்வால் தொடங்கி தலைமை நிதி அதிகாரி (CFO) தலைமை சட்ட அதிகாரி(CLO) உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், தானே ட்விட்டர் சிஇஓவாக செயல்படப்போகிறேன் என தலைமை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று நடத்தத் தொடங்கினார். சந்தா செலுத்தாத பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம், ட்விட்டரின் லோகோவான பறவையை மாற்றி நாயின் படத்தை வைத்தது, ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை செய்து தலைப்பு செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார் எலான் மஸ்க். தற்போது மேலும், ஒரு புதிய நடவடிக்கையை ட்விட்டரில் அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ட்விட்டரின் புதிய சிஇஓவாக 61 வயதான லிண்டா யாக்கரினோ என்ற பெண்ணை நியமித்துள்ளார்.
இத்தாலிய அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்த லிண்டா என்பிசி யூனிவர்சல் என்ற பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் விற்பனை நிறுவனத்தின் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். விளம்பர ஊடகத்துறையில் இவர் முன்னோடியாக கருதப்படுகிறார். மேலும் இதற்கு முன்னதாக டர்னர் என்டர்டெயின்மென்ட் என்ற பொழுதுபோக்கு ஊடகத்துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றவர்.
இதையும் படிங்க: அதிரடியாகக் குறைந்த சமையல் எண்ணெய் விலை..இதுதான் காரணம்...
கடந்த மாதம் பொது நிகழ்வு ஒன்றில் எலான் மஸ்க் லிண்டா பேட்டி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வாரங்களிலேயே ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ட்விட்டரின் நிர்வாகத் தலைவர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி போன்ற பொறுப்புகளில் எலான் மஸ்க் தான் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.