பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளைத்தடுக்க ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சென்னை பிரிவுத்தலைவர் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
இது பொருட்களுக்கான தர உரிமம் (ஐ.எஸ்.ஐ. முத்திரை), மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக்கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது ஹால்மார்க்கிங் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம். இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய அமைவனம்), தங்கத்தின் தூய்மை, நேர்த்தி மற்றும் 6 இலக்க தனித்த அடையாள எண் ஆகிய 3 அடையாளங்களைக்கொண்டுள்ளது. BIS CARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்ற ஐகானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.
வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம். ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் நகைக் கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.