ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சூதாட்டத்தை போன்றது - ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி பேச்சு..!

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சூதாட்டத்தை போன்றது - ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி பேச்சு..!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் கூறி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்த தாஸ் தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிராக மீண்டும் தனது கடுமையான கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் Business Today Banking and Economy Summit பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றார்.

கிரிப்டோ கரன்சிகளின் வளர்ச்சி காரணமாக நம் நாட்டு பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி இழக்க நேரிடும் என்பதால், இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் கூறி இருக்கிறார். இந்தியாவில் கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக்குவது நாட்டின் பொருளாதாரத்தின் 'டாலரைசேஷனுக்கு' (dollarization) வழிவகுக்கும் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் ரூபாய் (digital rupee) குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சக்திகாந்த தாஸ், டிஜிட்டல் கரன்சிக்கு ஏற்ற லாபகரமான சூழலை உருவாக்க வங்கிகளின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்றும் டேட்டா பிரைவசியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கிரிப்டோ என்றால் என்ன.!

சிலர் அதை சொத்து (asset) என்று அழைக்கிறார்கள், சிலர் அதை நிதி தயாரிப்பு (financial product) என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு சொத்து அல்லது நிதி தயாரிப்புக்கும் அடிப்படை மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோ விஷயத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்று குறிப்பிட்டார். எனவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் என்பது முற்றிலும் ஊகங்களின் அடிப்படையிலானது மற்றும் சூதாட்டத்திற்கு ஒப்பானது என்றும் கூறி உள்ளார். பிளாக்செயின் டெக்னலாஜி அதன் பல பயன்பாடுகளின் காரணமாக ஆதரிக்கப்பட வேண்டும் என சக்திகாந்த தாஸ் கூறினாலும் குறிப்பாக கிரிப்டோ கரன்சிக்கு எந்த அடிப்படை மதிப்பும் இல்லை என்று நம்புகிறார்.

செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய சக்திகாந்த தாஸ் நம்நாட்டில் நாம் சூதாட்டத்தை அனுமதிப்பதில்லை. ஒருவேளை சூதாட்டத்தை அனுமதிக்க விரும்பினால், கிரிப்டோ கரன்சியை சூதாட்டமாக கருதி இதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். எப்படியானாலும் கிரிப்டோ கரன்சியை ஒரு நிதி தயாரிப்பு அல்லது நிதி சொத்தாக கருதி பேசுவது முற்றிலும் தவறான வாதம் ஆகும். நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும்.

நாட்டின் பணவியல் ஆணையமாக மற்றும் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி இருப்பதால் பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்க கூடிய அபாயம் உண்டாகும். நாட்டின் பொருளாதாரத்தில் பராமரிக்க வேண்டிய பணவியல் கொள்கை, பணப்புழக்கம் மற்றும் பண விநியோக நிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் திறனையும் ரிசர்வ் வங்கி இழக்கும் என்று அச்சம் தெரிவித்தார். Crypto Assets பரிமாற்ற வழிமுறையாக மாறும் பண்புகளை கொண்டுள்ளன, இதில் பெரும்பாலானவை டாலர் மதிப்புடையவை. ரிசர்வ் வங்கியால் வழங்கப்படாத கிரிப்டோவை கொண்டு உதாரணத்திற்கு தோராயமாக 20% பரிவர்த்தனைகள் நடந்தால், பொருளாதாரத்தில் 20% பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாட்டை RBI இழக்கும். இது இந்திய பொருளாதாரத்தில் டாலர் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றார்.

First published:

Tags: Business, Crypto currency