பல்வேறு முக்கிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. அவற்றை இதில் பார்ப்போம்.
ஏப்ரல் 1-ம் தேதி, புதிய நிதியாண்டில் இருந்து பல்வேறு வகையான மாற்றங்கள் மற்றும் புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை ஏப்ரல் ஒன்றுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு ஆண்டு பிரீமியம் 5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அந்த காப்பீட்டு திட்டங்களில் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு கிடைக்காது. பிரிமீயம் தொகை 5 லட்சத்திற்கும் குறைவான காப்பீட்டு பாலிசிகளுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும் என்றுஅரசு அறிவித்துள்ளது.
தங்க நகைகள்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும். ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும்.
2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயமில்லை. ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்க அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 4 இலக்க ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரை நகைகள் 26 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.
சிலிண்டர் விலை
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2192.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ. 1,118.50 ஆகவே நீடித்து வருகிறது.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்.
மற்றொரு முக்கிய அறிவிப்பாக, அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்,384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல்
இன்று முதல் கார்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று, டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. புதிய நிதியாண்டு முதல், இரண்டாம் கட்டமாக பிஎஸ்-6 புகை வெளியேற்ற கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வர இருப்பதால் கார்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சொத்து விவகாரங்கள்
நிலம் வாங்குவோருக்கு சுமையை குறைக்கும் வகையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தது இன்று முதல் அமலுக்கு வருகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Gold, Medicines, Personal Finance