புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் சாகுபடியில்
களைக்கொல்லிகளை தெளிக்கும்போது பின்பற்றவேண்டிய
நடைமுறைகள் குறித்து புதுக்கோட்டை
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:- “பயிர் சாகுபடியில் களைகளினால் பயிரின் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக களைகளை கைகளாலோ அல்லது சிறுசிறு இயந்திரங்களின் மூலமாகவோ அகற்றலாம். தற்போது உள்ள ஆட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் களைக் கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால், தேவைப்படும் விவசாயிகள் பயிர்களுக்கு உகந்த களைக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
களைக்கொல்லி வகைகள்
களைக்கொல்லிகளை பொறுத்தவரை களை முளைக்கும் முன் தெளிக்கும் மருந்துகள் களைகள் முளைத்தபின் தெளிக்கும் மருந்துகள் என இரு வகைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பயிர்களுக்கு உகந்தவாறு தேர்வு திறன் உள்ள களைக்கொல்லிகள் உள்ளன.
அனைத்து வகையான பயிர்கள் மற்றும் களைச்செடிகள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய வகையில் உள்ள களைக்கொல்லிகள் தேர்வு திறனற்ற களைக்கொல்லிகள் எனப்படும்.இந்த வகையான தேர்வு திறனற்ற களைக்கொல்லிகள் பயிர்கள் இல்லாத இடங்களான வரப்புகள், அதிக பயிர் இடைவெளியில் உள்ள இடங்கள், பொது வெளிகள் ஆகிய இடங்களில் தெளித்து களைகளை கட்டுப்படுத்திடலாம்.
இவற்றை பயன்படுத்தும்போது அதிக கவனம் செலுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் களைக்கொல்லிகளை தேர்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான செயலாகும்.
ஆகையால், இதற்கு சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் அல்லது தங்கள் பகுதி விரிவாக்க பணியாளர்கள் ஆகியோரிடம் பரிந்துரை பெற்று கீழ்க்கண்ட வழிமுறைகளையும் கடைபிடித்து கொல்லிகளை தெளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. கண் கண்ணாடிகள், முகக்கவசம், கையுறைகள்
பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை அணிந்து
மருந்து தெளிக்க வேண்டும்.
2.வாங்குவதற்கு முன் களைக்கொல்லிகளின் தரத்தை
உறுதிப்படுத்த வேண்டும்.
3.பரிந்துரைக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப
மட்டுமே களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
4.களைக்கொல்லிகளை சரியான நேரத்தில், சரியான
அளவில் பயன்படுத்த வேண்டும்.
5. களைகள் அடையாளம் காணப்பட்டால், வயலில் அந்த முக்கிய களைகளைக் கட்டுப்படுத்த பயனுள்ள பரிந்துரைக்கப்பட்ட களைக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும்.
6. சரியான செறிவு பெற சரியான கொல்லியை தண்ணீரில் கலக்க வேண்டும்.
7. வயலில் நிலவும் வறட்சி, ஈரப்பதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு களைக்கொல்லிகளை இட வேண்டும்.
8. களைக்கொல்லிகளைப் பயன்படுத்திய பின்பு பாதுகாப்பு ஆடைகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்கக் கூடாது.
9. களைக்கொல்லிகளை உண்ணும் உணவுகள், குழந்தைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து விலக்கி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
10. களைக் கொல்லிகள் தெளித்த பிறகு கால்நடைகளை வயலில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
11. களைக்கொல்லிகள் தெளிக்க நாப்சாக் தெளிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும். தெளிக்கும் போது ஃப்ளட் ஜெட் அல்லது தட்டையான மின்விசிறி நாசிலைப் பயன்படுத்த வேண்டும்.
12.காற்று வீசும் போது களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்லாமல் காற்று அதிகரிக்கும்போது மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
13. காலை மற்றும் மாலை வேலைகள் பொதுவாக களைகொல்லி தெளிக்க சிறந்த நேரமாகும்.
14.களைக்கொல்லிகளை பயன்படுத்திய பகுதிகளில் நடக்கக்
கூடாது.
15.தெளிப்பிற்கு தேவையான அளவு மட்டும் களைக்கொல்லி கலவையினை தயார் செய்ய வேண்டும்.
16.களைக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பும் பயன்படுத்திய பின்பும் தெளிப்பான்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
16. பூச்சிக்கொல்லி லேபிளில் உள்ள நடைமுறை சிகிச்சை முறைகளை உபயோகத்திற்கு முன் படித்து முதலுதவி நடை முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொதுவான நடைமுறைகள் பின்வருமாறு
1. களைக்கொல்லி பட்டால் உடனே தோலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
2. களைக்கொல்லியினை அதிகமாக சுவாசித்திருந்தால் சுத்தமான காற்று வீசும் பகுதிக்கு வரவேண்டும்.
3. பாதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்
எனவே விவசாயிகள் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும்போது உரிய தனிநபர் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmer