தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ள போதிலும், அட்சய திருதியையொட்டி, கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாக தங்க நகைகள் விற்பனையானதாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பூமியில் விஷ்ணு, மனித அவதாரம் எடுத்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாள் அட்சய திரிதியை. இந்நாளில் புதிய முதலீடு செய்வது அதிர்ஷ்டம் தரும் என்றும் மங்களகரமான நிகழ்வுகளுக்கு ஏற்ற நாளாகவும் மக்களால் நம்பப்படுகிறது.
நடுத்தர மற்றும் ஏழை மக்களின் குறைந்தபட்ச சேமிப்பாகவும் வசதிக்கேற்ப கிராம் முதல் பல சவரன் வரை வாங்க முடியும் என்பதாலும், அட்சய திருதியை தினத்தில் மக்களின் பிரதான முதலீடாக தங்கம் விளங்குகிறது.
அக்சய திருதியை நாளில், தங்கம் வாங்கினால், செல்வ வளம் பன்மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்ட காரணத்தால், நகைக்கடைகள், பல்வேறு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும், அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், சித்திரை மாத அமாவாசையை தொடர்ந்து வளர்பிறை நாளில் வரும் அட்சய திருதியை, நடப்பாண்டு இரண்டு நாட்கள் நீடித்தது. இந்த 2 நாட்களும் தங்க நகைகள் வியாபாரம் களைகட்டியதால், வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கம், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44,840 ரூபாய்க்கு விற்பனையானது. அட்சய திருதியை விற்பனைக்காக புதிய வடிவமைப்பிலான ஆபரணங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: ஜப்பான்.. சிங்கப்பூர்.. முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் காலையில் முன்கூட்டியே நகைக்கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக் கடைகளில் மக்கள் காலை முதலே நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். அதிக கூட்டம் காரணமாக கடையின் முன்பு கவுன்ட்டர்கள் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் கொடுத்து நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
முகூர்த்த நாள், அக்சய திரிதியை, குரு பெயர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து வந்த காரணத்தால், காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகள் வாங்கவும் பெண்கள் குவிந்தனர். வெளியூர் மட்டுமின்றி கேரள, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்தனர். இதனால், காந்தி சாலை, தேரடி மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Akshaya Tritiya